2025 - ஒரு பார்வை

2025 REWIND : சாட்டையடி முதல் செருப்பு அணியாதது வரை... அண்ணாமலையின் அரசியல் சர்ச்சைகள்

Published On 2025-12-09 08:00 IST   |   Update On 2025-12-09 08:00:00 IST
  • ஏப்ரல் மாதம் தனது பா.ஜ.க. மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகினார்.
  • அண்ணாமலைக்கு பிறகு நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. மாநில தலைவராக பணியாற்றி வருகிறார்.

கர்நாடகாவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் அண்ணாமலை. இவர் பா.ஜ.க. மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக அக்கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார்.

இதனால் பா.ஜ.க. தமிழக மாநில துணைத்தலைவராக 2020-ம் ஆண்டு பதவியேற்றார். அதனை தொடர்ந்து 2021-ம் ஆண்டு தலைவராக பதவியேற்றார். இதன் பிறகு தமிழக பா.ஜ.க. அரசியல் களத்தில் மும்முரமாக செயல்பட்டு வந்தது. இருப்பினும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை சந்தித்தது. இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இடம்பெறாததே காரணம். அதற்கு அண்ணாமலையே காரணம் என ஒரு சாரார் குற்றம்சாட்டினர்.

பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு பல திடுக்கிடும் சம்பவங்களை செய்து அண்ணாமலை பேசும்பொருளானார். அதில் ஒன்று, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும் கூறி, தமிழக அரசை கண்டித்து அண்ணாமலை ஒரு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார். கோவையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தனக்குத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டம், தமிழக அரசியல் களத்தில் முதல்முறை எனக் கூறப்படும் ஒரு நூதன முறையாக இருந்ததுடன், பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

 

மேலும், தி.மு.க. ஆட்சியில் இருந்து அகற்றப்படும் வரை காலணி அணியாமல் வெறும் காலுடன் நடப்பேன் என்று சபதம் எடுத்த அண்ணாமலை சில மாதங்கள் செருப்பு அணியாமல் நடந்து வந்தார். இதன்பின் ஏப்ரல் 12-ந்தேதி அன்று தனது சபதத்தை முடித்துக்கொண்டு மீண்டும் காலணி அணியத் தொடங்கினார்.

இதனிடையே, பாராளுமன்ற தேர்தலில் அடைந்த தோல்வியை போல் சட்டமன்ற தேர்தலிலும் தோல்வி ஏற்படக்கூடாது என்று கருதிய டெல்லி மேலிடம் அ.தி.மு.க.வை அணுகியது. அதற்கு அ.தி.மு.க. தரப்பில் தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நீடிக்கும் வரை கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து, ஏப்ரல் மாதம் தனது பா.ஜ.க. மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகினார். அண்ணாமலைக்கு பிறகு நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. மாநில தலைவராக பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையே, அண்ணாமலை பதவியில் இருந்து விலகியதற்கு எடப்பாடி பழனிசாமி போட்ட கண்டிஷன் மட்டுமே காரணம் இல்லை என்று கூறப்படுகிறது. அதற்கு வேறொரு காரணம் சொல்லப்படுகிறது.

 

அதாவது, கோயம்புத்தூரில் அண்ணாமலை வாங்கிய நிலத்தின் சந்தை மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய் என்றும், அது சட்டவிரோதமாக வாங்கப்பட்டதாகவும், மாதத்திற்கு ரூ. 6 லட்சம் வாடகை செலுத்தி வருவதாகக் கூறப்பட்ட நிலையில், இவ்வளவு பெரிய தொகைக்கு நிலத்தை வாங்குவதற்கு நிதி எப்படி வந்தது என பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதற்கு அண்ணாமலை தரப்பில், ஜூலை 12, 2025 அன்று விவசாய நிலம் வாங்கியது உண்மைதான். அனைத்து நடைமுறைகளும் சட்டப்பூர்வமாகப் பின்பற்றப்பட்டன. நிலத்தை வாங்கத் தனது மற்றும் தனது மனைவியின் சேமிப்பு மற்றும் வங்கிக் கடன் பயன்படுத்தப்பட்டதாகக் கூறினார்.

நிலப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வைக்காக ரூ. 40.59 லட்சம் மாநில அரசுக்குச் செலுத்தப்பட்டுள்ளது. இயற்கை விவசாயம் மற்றும் பால் பண்ணை அமைப்பதற்காகவே நிலம் வாங்கப்பட்டது என்றும், இதற்காக பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடனுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுவே தான் வாங்கிய முதல் அசையா சொத்து என்றும், அடுத்த ஆண்டு வருமான வரி அறிக்கையில் அனைத்து விவரங்களும் தெரியவரும் என்றார்.

 

முன்னதாக, அண்ணாமலை பா.ஜ.க. மாநில தலைவராக பதவி வகித்த போது ஆளும் கட்சிக்கு எதிரான கண்டனங்களையும், போராட்டங்களையும் தீவிரமாக முன்னெடுத்து வந்தார். மேலும், பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர் புதிய பா.ஜ.க. தலைவரான நயினார் நாகேந்திரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனால் சில மாதங்கள் ஆக்டிவாக இல்லாமல் இருந்த அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை அண்ணாமலை பா.ஜ.க.வில் தான் நீடிக்கிறார். ஆனால் 2026-ம் ஆண்டிலும் அண்ணாமலை பா.ஜ.க.வில் தான் இருப்பாரா? அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படுமா? இல்லை அதிருப்தியில் தனிக்கட்சி தொடங்குவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Tags:    

Similar News