புதுச்சேரி

பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் இந்திய அளவில் புதுச்சேரி தொகுதி பெண்கள் முதலிடம்

Published On 2024-12-31 10:38 IST   |   Update On 2024-12-31 10:38:00 IST
  • மின்னணு ஒட்டு பதிவு இயந்திரத்தில் ஆண்கள்-3,77,934, பெண்கள்-4, 29,685, 3-ம் பாலினத்தவர்-105 பேர் ஓட்டளித்தனர்.
  • 3-ம் பாலின வாக்காளர்களில் 70 சதவீதம் ஓட்டளித்தனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் புதுச்சேரியின் மொத்த வாக்காளர்களில் 53.03 சதவீதம் பெண் வாக்காளர்கள் ஓட்டளித்து இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளனர். 2024 பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் 5,42,979 லட்சம் பெண் வாக்காளர்கள் பதிவு செய்திருந்தனர்.

மாகி சட்டசபை தொகுதிகளில் 31 ஓட்டுச்சாவடிகளும் பெண் அதிகாரிகளால் நடத்தப்பட்டது. இவர்களுக்கு ஓட்டு பதிவு இயந்திரங்கள், தேர்தல் நடைமுறைகள் பற்றி விரிவாக பயிற்சிகள் வழங்கப்பட்டன.

2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் 7,90,895 லட்சம் பேர் ஓட்டளித்த சூழ்நிலையில், கடந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் 8,11,432 லட்சம் பேர் ஓட்டளித்துள்ளனர். 2019 பாராளுமன்ற தேர்தலை ஒப்பிடும்போது 2.5 சதவீதம் ஓட்டு பதிவு அதிகரித்துள்ளது. மின்னணு ஒட்டு பதிவு இயந்திரத்தில் ஆண்கள்-3,77,934, பெண்கள்-4,29,685, 3-ம் பாலினத்தவர்-105 பேர் ஓட்டளித்தனர்.

2019 பாராளுமன்ற தேர்தலில் 643 பேர் தபால் ஓட்டு பதிவு செய்திருந்தனர். இது 2024 பாராளுமன்ற தேர்தலில் 3,708 ஆயிரம் பேர் ஓட்டளித்தனர். நோட்டாவை பொருத்தவரை கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் 12,199 பேர் ஓட்டளித்து இருந்த சூழ்நிலையில், 2024 தேர்தலில் 9,763 பேர் ஓட்டளித்து இருந்தனர். 3-ம் பாலின வாக்காளர்களில் 70 சதவீதம் ஓட்டளித்தனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News