புதுச்சேரி

விஜய் பொதுக்கூட்டத்தில் மாஸ் காட்டிய பெண் போலீஸ் உயர் அதிகாரி... யார் இந்த இஷா சிங்?

Published On 2025-12-10 07:51 IST   |   Update On 2025-12-10 07:51:00 IST
  • தந்தை ஓய்வு பெற்ற உடனே ஐ.பி.எஸ். ஆக வேண்டும் என்று இஷா சிங் விருப்பம் தெரிவித்தார்.
  • சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு குரல் கொடுப்பவராக திகழ்ந்தார்.

விஜய் பொதுக்கூட்டத்தில் அதிரடி காட்டி அனைவராலும் ஈர்க்கப்பட்டவர் இஷா சிங். யார் இவர்? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கிய நிலையில் அவரை பற்றிய தகவல்கள் வருமாறு:-

இஷா சிங் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுவை காவல்துறையில் சேர்ந்து கிழக்குபகுதி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு துறை சீனியர் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றார். சுகாதாரத்துறையில் போலி மருந்து மோசடி வழக்கில் துணிச்சலுடன் செயல்பட்டு சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர்கள் 2 பேர் உள்பட 6 பேரை கடந்த மாதம் அதிரடியாக கைது செய்தார்.

இஷா சிங்கின் தாத்தா, தந்தை ஒய்.பி. சிங் இவர்களும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஆவர். தந்தை ஒய்.பி. சிங் கடந்த 2004-ம் ஆண்டு காவல்துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது மும்பை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். அவரது தந்தை ஓய்வு பெற்ற உடனே ஐ.பி.எஸ். ஆக வேண்டும் என்று இஷா சிங் விருப்பம் தெரிவித்தார். 'நேசனல் ஸ்கூல் ஆப் லா' கல்லூரியில் சட்டமும் படித்த இஷா சிங் மும்பை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார்.

சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு குரல் கொடுப்பவராக திகழ்ந்தார். விஷவாயு தாக்கி உயிரிழந்த மனித கழிவுகளை அப்புறப்படுத்தும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்காக மும்பை ஐகோர்ட்டில் வாதாடி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் பெற்றுக் கொடுத்தார். அதன்பின் இந்திய குடிமை பணிக்கான தேர்வு எழுதி தற்போது ஐ.பி.எஸ்.அதிகாரியாக உள்ளார். தற்போது அவர் ஐ.ஏ.எஸ். மற்றும் நீதிபதிக்கான தேர்வுகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

Tags:    

Similar News