இந்தியா

படகுகள் தீ விபத்திற்கு காரணமான யூடியூபர் கைது: அழுது புலம்பிய மீனவர்களை படம் பிடித்து வெளியிட்ட அவலம்

Published On 2023-11-21 05:13 GMT   |   Update On 2023-11-21 06:10 GMT
  • 40 படகுகள் முழுமையாக எரிந்தது. 20 படகுகள் தீ விபத்தில் சேதம் அடைந்தன.
  • படகு விற்பனை தொடர்பாக அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் திடீரென தீப்பற்றி எரிந்தன.

40 படகுகள் முழுமையாக எரிந்தது. 20 படகுகள் தீ விபத்தில் சேதம் அடைந்தன.

இந்த தீபத்து காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 150 மீனவ குடும்பத்தினர். இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இந்நிலையில் தீ விபத்துக்கு காரணமான யூடியூபர் நானி என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நானி என்பவருக்கு சொந்தமாக 2 மீன்பிடி படகுகள் உள்ளன. இவர் லோக்கல் பாய் நானி என்ற பெயரில் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் போடுவதுடன் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.

கடலில் மீன் பிடித்தல் உட்பட பல குறும்படங்களை தயாரித்து வெளியிட்டு பிரபலமாக உள்ளார்.

இந்நிலையில் நானியின் மனைவிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வளைகாப்பு நடந்தது. இதனைத் தொடர்ந்து நானி துறைமுகத்தில் உள்ள அவரது படகில் வைத்து நண்பர்களுக்கு மது விருந்து அளித்தார்.

அப்போது படகு விற்பனை தொடர்பாக அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த மோதலில் ஒரு படகில் தீ விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து மற்ற படகுகளுக்கும் தீ வேகமாக பரவி எரிந்து நாசமாகி உள்ளன.

தீ விபத்து ஏற்பட்டதும் யூடியூபர் நானி மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி வெளியே வந்துள்ளனர். விபத்தில் படகுகள் கொழுந்து விட்டு எரிந்த நேரத்தில் அங்கே இருந்த நானி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மத்தியில் இருந்தபடி வீடியோ பதிவு செய்தார்.

மேலும் தங்கள் படகுகள் எரிவதை பார்த்து கூக்கிரலிட்டு கண்ணீர் விட்டு அழுத மீனவர்களையும் படம்பிடித்தார். இந்த வீடியோவை அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டார்.

இந்த வீடியோ வைரலாக பரவியது. விசாரணையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News