இந்தியா

ராகுல் வெளிநாடு போகும்போதெல்லாம்.. பஹல்காம் தாக்குதல் பற்றி சர்ச்சை பதிவிட்ட பாஜக ஐ.டி விங் மீது FIR

Published On 2025-04-25 10:52 IST   |   Update On 2025-04-25 10:52:00 IST
  • "ராகுல் காந்தி நாட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு முறையும், நாட்டிற்குள் ஏதோ ஒரு மோசமான விஷயம் நடக்கிறது"
  • அரசியல் விவாதங்களில் தேசிய நலனை இழுப்பதை நாங்கள் ஆதரிக்கவில்லை.

காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்களுடன் ஒத்துப்போகின்றன என்று உணர்த்தும் சமூக ஊடகப் பதிவிற்காக கர்நாடக காவல்துறை அம்மாநில பாஜக ஐடி பிரிவு மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வையும், ராகுல் காந்தி மேற்கொண்ட அமெரிக்க பயணத்தையும் குறிப்பிட்டு அந்த பதிவு இருந்தது.

சர்ச்சைக்குரிய அந்தப் பதிவில், "ராகுல் காந்தி நாட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு முறையும், நாட்டிற்குள் ஏதோ ஒரு மோசமான விஷயம் நடக்கிறது" என்று அவரின் புகைப்படத்துடன் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் சட்ட மற்றும் மனித உரிமைகள் பிரிவின் தலைவர் சி.எம். தனஞ்சயா அளித்த புகாரின் பேரில், பெங்களூருவில் உள்ள ஹை கிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் பாஜக ஐடி பிரிவு மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்,"அரசியல் விவாதங்களில் தேசிய நலனை இழுப்பதை நாங்கள் ஆதரிக்கவில்லை.

எங்களுக்கு, நாட்டின் ஒற்றுமை முதலில் முக்கியம் எக்காரணம் கொண்டும் நாட்டின் அமைதி பாதுகாக்கப்பட வேண்டும். இதுபோன்ற முக்கியமான விஷயங்களை யாரும் அரசியலாக்கக்கூடாது. ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்பும் மிக முக்கியமானது" என்று கூறினார். 

Tags:    

Similar News