டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளிகள் பாதாள உலகில் இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து தண்டிப்போம் - அமித் ஷா
- இது தற்கொலைப்படை தாக்குதல் என NIA அறிவித்தது.
- பாதாள உலகில் இருந்தாலும், அவர்களைத் தேடி கண்டுபிடித்து கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்வோம்.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த வாரம் திங்கள்கிழமை நடந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இருவர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரித்து வருகிறது. இது தற்கொலைப்படை தாக்குதல் என NIA நேற்று அறிவித்தது. சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் அரியானாவில் நேற்று நடைபெற்ற வடக்குமண்டல கவுன்சில் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், "டெல்லி குண்டுவெடிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள், பாதாள உலகில் இருந்தாலும், அவர்களைத் தேடி கண்டுபிடித்து கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்வோம்.
அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை, நம் நாட்டில் இதுபோன்ற தாக்குதலை யாரும் நினைத்துப் பார்க்கக்கூடத் துணியக்கூடாது என்ற செய்தியை உலகுக்குக் காட்டும்'' என்று தெரிவித்தார்.