இந்தியா

260 பேர் பலியான அகமதாபாத் விமான விபத்துக்கு விமானி தான் காரணமா? - உச்சநீதிமன்றம் சொன்னது இதுதான்

Published On 2025-09-23 03:01 IST   |   Update On 2025-09-23 03:01:00 IST
  • விசாரணைக்காக அமைக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவில் மூன்று பேர் விமானப் போக்குவரத்து இயக்குநரககத்தை (DGCA) சேர்ந்தவர்கள் என்பது ஒருதலைப்பட்சமாக உள்ளது.
  • மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதிட்டார்.

கடந்த ஜூன் 12 ஆம் தேதி, அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் AI 171, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.

விபத்தில், 230 பயணிகளில் 229 பேர், பணியாளர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் விமானம் மோதியதில் மேலும் 19 பேர் உயிரிழந்தனர். ஒரு பயணி மட்டுமே அதிசயமாக உயிர் தப்பினார்.

இன்ஜினுக்கு எரிபொருள் அனுப்பும் ஸ்விட்ச் பழுது காரணமாக எரிபொருள் விநியோகம் நின்று விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால் விமானி இன்ஜினுக்கு எரிபொருள் அனுப்பும் ஸ்விட்சை வேண்டுமென்றே ஆஃப் செய்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சுயாதீன விசாரணை கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கு நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி என் கோட்டேஷ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதிட்டார். முதற்கட்ட அறிக்கையில் முக்கிய தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் சுவிட்ச் பிழைகள் மற்றும் மின் சிக்கல்கள் போன்ற முறையான பிழைகளை குறைத்து மதிப்பிட்டு விமானிகள் மீது பழியை மாற்ற முயற்சி நடந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

விபத்து குறித்த விசாரணைக்காக அமைக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவில் மூன்று பேர் விமானப் போக்குவரத்து இயக்குநரககத்தை (DGCA) சேர்ந்தவர்கள் என்பது ஒருதலைப்பட்சமாக உள்ளது. யார் மீது குற்றச்சாட்டு உள்ளதோ அவர்களே விசாரணை நடத்துவது நியாயமா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், விமானிகள் மீது குற்றம் சாட்டி 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகையில் கட்டுரை வெளிவந்ததை பிரசாந்த் பூஷண்குறிப்பிட்டார்.

அப்போது பேசிய நீதிபதி சூர்யா காந்த், "இது போன்ற ஊகங்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் பொறுப்பற்ற கருத்துக்கள் ஆகும். இதுபோன்ற முக்கியமான விஷயங்களில் ரகசியத்தன்மை மிகவும் முக்கியமானது" என்று தெரிவித்தார்.

மேலும் இந்த மனு மீது பதிலளிக்க கோரி மத்திய அரசு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (DGCA) நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Tags:    

Similar News