VIDEO: நீதிபதியை பகிரங்கமாக எச்சரித்த வழக்கறிஞர்.. பரபரப்பான உயர்நீதிமன்றம்
- தனது கட்சிக்காரரின் மின் இணைப்பை மீண்டும் வழங்கக் கோரி வழக்கறிஞர் மகேஷ் திவாரி வாதிட்டுக் கொண்டிருந்தார்.
- வழக்கறிஞரின் நடத்தை குறித்து கவனத்தில் கொள்ளுமாறு நீதிபதி கேட்டுக் கொண்டார்.
ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியை வழக்கறிஞர் ஒருவர் மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அக்டோபர் 16 அன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, நீதிபதி ராஜேஷ் குமாருக்கும், வழக்கறிஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நிலுவையில் உள்ள கட்டணங்கள் காரணமாகத் துண்டிக்கப்பட்ட தனது கட்சிக்காரரின் மின் இணைப்பை மீண்டும் வழங்கக் கோரி வழக்கறிஞர் மகேஷ் திவாரி வாதிட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால், மொத்த நிலுவைத் தொகையில் 50 சதவிகிதம் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற முந்தைய தீர்ப்பை நீதிபதி குமார் மேற்கோள் காட்டினார்.
இறுதியில், வழக்கறிஞர் தனது கட்சிக்காரர் அந்த தொகையை டெபாசிட் செய்ய ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தது.
ஆனால் வழக்கறிஞர் மகேஷ் திவாரி தனது வாதங்களை முன்வைத்த விதம் குறித்து நீதிபதி குமார் ஆட்சேபம் தெரிவித்தார். நீதிமன்றத்தில் இருந்த ஜார்க்கண்ட் மாநில வழக்கறிஞர் கவுன்சிலின் தலைவரை அழைத்து, வழக்கறிஞரின் நடத்தை குறித்து கவனத்தில் கொள்ளுமாறு நீதிபதி கேட்டுக் கொண்டார்.
அப்போது மகேஷ் திவாரி, நீதிபதி இருக்கையை நோக்கிச் சென்று, "நான் என் வழியில்தான் வாதிடுவேன்" என்றும் நீதிபதியைப் பார்த்து "வரம்பை மீறாதீர்கள்" என்றும் எச்சரித்தார். மேலும் "நாடு நீதித்துறையால் எரிந்துகொண்டிருக்கிறது" என்றும் அவர் கூறினார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் வழக்கறிஞர் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிந்துள்ளது.