இந்தியா

அச்சுறுத்தல்களுக்கு இந்தியா அடிபணியாது- வெங்கையா நாயுடு

Published On 2025-08-10 08:13 IST   |   Update On 2025-08-10 08:14:00 IST
  • இந்தியா வேகமாக முன்னேறி உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது.
  • இந்தியாவுக்கு எதிராகவோ, இந்தியாவைப்பற்றியோ யாருக்கும் எந்த குறையும் இருக்க முடியாது.

புதுடெல்லி:

இந்திய பொருட்களுக்கு முதலில் 25 சதவீத வரியை விதித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் கூடுதலாக 25 சதவீதம் என 50 சதவீத வரி விதித்து அதிரடி காட்டியுள்ளார். டிரம்பின் இந்த நடவடிக்கை இந்தியா மட்டுமின்றி சர்வதேச அரங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் டிரம்பின் இந்த மிரட்டலுக்கு அடிபணியமாட்டோம் என இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது.

இந்த நிலையில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் அமெரிக்க வர்த்தக பதற்றத்துக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்வதில் நாங்கள் உறுதியாக இருப்போம். மேலும் நமது மூலோபாய மற்றும் தேசிய நலனில் உறுதியாக நிற்போம். எந்த அச்சுறுத்தல்களுக்கும் அடிபணிவது என்ற கேள்விக்கே இடமில்லை. அச்சுறுத்தல்கள் இந்தியாவிடம் எடுபடாது.

'பகிர்வு மற்றும் பராமரிப்பு' தத்துவத்தின் அடிப்படையில் ஒத்துழைப்புக்கு உறுதியுடன் இருக்கும் அதே வேளையில், இந்தியா தனக்காகவும் நிற்கிறது.

இந்தியா வேகமாக முன்னேறி உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது. இதைப்பார்த்து சில நாடுகள் பொறாமை கொள்கின்றன. நமது வளர்ச்சியை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அஜீரணக்கோளாறால் அவதிப்படுகின்றன.

உலக அளவில் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறி வரும் நிலையில், விவசாயிகள், ஆய்வாளர்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பால் நாடு நிச்சயம் பல உயரங்களை எட்டும்.

இந்தியா ஒரு துடிப்பான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு. 6.5 முதல் 7 சதவீதம் வரை வளர்ச்சியை பெற்றுள்ள இந்தியா சர்வதேச ஜி.டி.பி.யில் 18 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. 11 சதவீத பங்களிப்பை வழங்கும் அமெரிக்காவை விட மேலே இருக்கிறது.

ரஷியாவிடம் இருந்து யுரேனியம், உரத்தை அமெரிக்காவும், அதிக அளவிலான கச்சா எண்ணெயை ஐரோப்பிய நாடுகளும் இறக்குமதி செய்யும் நிலையில் இந்தியா போன்ற நட்பு நாடுகளுக்கு வரி விதிப்பது நியாயமா?

நாம் நண்பர்கள். உலகின் பழமையான ஜனநாயகமாக இருக்கும் அமெரிக்காவை நாம் எப்போதும் போற்றுகிறோம். நாம் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள். ஒருவரையொருவர் மதிக்கிறோம், போற்றுகிறோம்.

ஆனால் எந்த ஆத்திரமூட்டலும் இல்லாமல், காரணமும் இல்லாமல் இந்தியாவை குறித்து சொல்லப்படுவது அனைத்தும் துரதிர்ஷ்டவசமானது.

இந்த வர்த்தக பதற்றம் இருந்தபோதும் பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்றவே இந்தியா விரும்புகிறது. பகிர்வு மற்றும் பராமரிப்பு என்பது இந்திய தத்துவத்தின் மையக்கருவாக உள்ளது.

இந்தியாவுக்கு எதிராகவோ, இந்தியாவைப்பற்றியோ யாருக்கும் எந்த குறையும் இருக்க முடியாது.

இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்

Tags:    

Similar News