நாட்டின் நலனை முதன்மையாக கருதுவதால் காங். தலைவர்கள் சசி தரூரை டார்கெட் செய்கின்றனர்: பாஜக விமர்சனம்
- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்கும் குழுத் தலைவராக சசி தரூரை அறிவித்தது மத்திய அரசு.
- பனமா நாட்டில் பிரதமர் மோடியை பாராட்டி சசி தரூர் பேசியிருந்தார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. 9 முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க மத்திய அரசு 7 குழுக்களை அமைத்தது. இந்த குழுக்கள் உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளக்கம் அளித்து வருகிறது. பயங்கரவாதத்தை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாதது என்பதற்கு ஆதரவு திரட்டி வருகிறது.
7 குழுக்களில் ஒரு குழுவிற்கு சசி தரூரை தலைவராக மத்திய அரசு அறிவித்தது. காங்கிரஸ் கட்சியிடம் மத்திய அரசு எம்.பி.க்கள் பெயரை கேட்டிருந்தது. அதில் சசி தரூர் பெயர் இடம் பெற்றிருக்கவில்லை. மத்திய அரசு தன்னிச்சையாக இடம் பெற்ற செய்ததில் இருந்து, சசி தரூருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கருத்துகள் தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையே பனமாவில் சசி தரூர் பேசும்போது "2016-க்குப் பிறகு இந்தியா எல்லைக்கட்டுப்பாடு கோட்டை (LoC) தாண்டி தாக்கல் நடத்தியது. சர்வதேச எல்லையை தாண்டி பாகிஸ்தானில் சென்று தாக்குதல் நடத்தியது. 26 பெண்களில் நெற்றிக் குங்குமத்தை அளித்த பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் தேவையானது என்பதை பிரதமர் மோடி தெளிவாக விளக்கியுள்ளார்" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு காங்கிரஸ் கட்சிகளில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அக்கட்சியின் பவன் கெர்ரா "மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசிய வீடியோவை பகிர்ந்து, யுபிஏ அரசாங்கத்தின் கீழ் ஏராளமான சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டுள்ளதா மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
மற்றொரு காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ் "சசி தரூரை உடனடியாக பாஜக-வின் சூப்பர் செய்தி தொடர்பாளராக ஆக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பாஜக, கட்சியை நலத்தை விட நாட்டின் நலனை முதன்மையாக கருதுவதால் ராகுல் காந்தியின் விருப்பப்படி சசி தரூர் டார்கெட் செய்யப்படுகிறார் என விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி அதன் சொந்த தலைவருக்கு எதிராக ஏவுகணை வீசுகிறது. ராகுல் காந்தி விருப்பத்தின்படி சசி தரூர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார். ஏனென்றால், அவர் முதலில் நாட்டின் நலனை முதன்யைமாக கருதுகிறார். காந்தி குடும்பத்தின் நலனை கருதவில்லை.. நாட்டின் நலன் பற்றி பேசினார். கட்சியின் நலன் குறித்து பேசவில்லை. வாக்கு வங்கியை விட நாட்டின் நலனை முதன்மையாக கருதுவதால் தாக்கப்படுகிறார்.
இவ்வாறு ஷேசாத் பூனவல்லா தெரிவித்துள்ளார்.