பிரம்மபுத்திரா நதியில் பிரதமர் மோடி, கப்பலில் மாணவர்களுடன் கலந்துரையாடல்
- நேற்று முதல் 2 நாட்களுக்கு பிரம்மபுத்திரா நதியில் படகு சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
- மொத்தம் 45 நிமிடம் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப் பயணமாக நேற்று காலை மேற்கு வங்காளம் சென்றார். பின்னர் அங்கிருந்து அசாமிற்கு பிற்பகலில் சென்றார்.
கவுகாத்தியில் ரூ.4000 கோடியில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் வாகன பேரணி நடத்தி பா.ஜ.க. தலைமை அலுவலகம் சென்றார்.
2-வது நாளான இன்று பிரதமர் மோடி அசாம் போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் அசாம் முதல்-மந்திரி ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதை தொடர்ந்து பிரம்மபுத்திரா நதியில் சொகுசு கப்பலில் பிரதமர் மோடி மாணவர்களுடன் உரையாற்றுகிறார்.
3 அடுக்குகள் கொண்ட எம்.வி.சராய்தேவ்-2 கப்பலில் அவர் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். அசாமில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 25 மாணவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். மொத்தம் 45 நிமிடம் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதையொட்டி அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதலே பாதுகாப்புபடை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் நேற்று முதல் 2 நாட்களுக்கு பிரம்மபுத்திரா நதியில் படகு சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் கலந்துரையாடலுக்கு பிறகு திப்ருகர், நாம்ரூப் ஆகிய பகுதிகளில் பிரதமர் மோடி ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான அம்மோனியா-யூரியா உரத் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.