இந்தியா

ஆம்புலன்ஸ் மறுப்பு.. 4 மாத குழந்தையின் உடலை பிளாஸ்டிக் பையில் சுமந்து, பேருந்தில் பயணித்த பழங்குடியின தந்தை

Published On 2025-12-21 11:01 IST   |   Update On 2025-12-21 11:01:00 IST
  • 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் வாகனம் கேட்டிருந்தார்.
  • தந்தையின் பாக்கெட்டில் ரூ.100 மட்டுமே இருந்தது. அதில், ரூ.20 பணத்தை அருகிலுள்ள கடையில் இருந்து பிளாஸ்டிக் கவரை வாங்கினார்.

ஜார்க்கண்டில் மருத்துவமனையின் அலட்சியத்தால், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் தனது நான்கு மாத மகனின் உடலை பிளாஸ்டிக் பையில் வைத்துக்கொண்டு பேருந்தில் வீடு திரும்ப வேண்டிய அவலம் நிகழ்ந்துள்ளது.

ஜார்க்கண்டில் உள்ள சாய்பாசா சதார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக வியாழக்கிழமை குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை சிகிச்சையின் போது குழந்தை இறந்தது.

தனது மகன் இறந்த பிறகு, அவரது தந்தை டிம்பா, உடலை 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் வாகனம் கேட்டிருந்தார்.

மணிக்கணக்கில் காத்திருந்தும், அதிகாரிகள் வாகனம் ஏற்பாடு செய்யத் தயாராக இல்லை. இதற்கிடையில், குழந்தையின் தந்தையின் பாக்கெட்டில் ரூ.100 மட்டுமே இருந்தது.

அதில், ரூ.20 பணத்தை அருகிலுள்ள கடையில் இருந்து பிளாஸ்டிக் கவரை வாங்கி, அதில் தனது மகனின் உடலைச் வைத்தார்.

மீதமுள்ள பணத்தைதில் சாய்பாசாவிலிருந்து நோமுண்டிக்கு பஸ் டிக்கெட் எடுத்துக்கொண்டு கையில் பிளாஸ்டிக் கவரில் சுற்றிய மகனின் உடலுடன் பயணித்தார்.

நோமுண்டியில் இறங்கி தனது கிராமத்திற்கு அவர் நடந்தே சென்றார். மருத்துவமனையிலிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

ஆம்புலன்ஸ் அப்போது வேறு இடத்திற்கு சென்றிருந்தது என்றும் மேலும் 2 மணி நேரம் காத்திருக்க சொல்லியும் அவர் சென்றுவிட்டார் என்றும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில சுகாதார அமைச்சர் இர்பான் அன்சாரி கூறினார்.  

Tags:    

Similar News