நாட்டில் போலி பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்வு - UGC எச்சரிக்கை
- UGC தற்போது மேலும் 3 கல்வி நிறுவனங்களைப் போலிப் பட்டியலிட்டுள்ளது.
- இந்தப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளோமா சான்றிதழ்கள் எதற்கும் அங்கீகாரம் கிடையாது.
இந்தியாவில் போலிப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தற்போது மேலும் 3 கல்வி நிறுவனங்களைப் போலிப் பட்டியலிட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் உள்ள மொத்த போலிப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்ஸ், கர்நாடகாவில் உள்ள சர்வ பாரதிய சிக்ஷா பீடம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள நேஷனல் பேக்வார்ட் கிருஷி வித்யாபீடம் ஆகிய கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெறாத போலியான நிறுவனங்கள் என்று UGC தெரிவித்துள்ளது.
இந்தப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளோமா சான்றிதழ்கள் எதற்கும் அங்கீகாரம் கிடையாது. இந்தச் சான்றிதழ்களைக் கொண்டு மேல் படிப்பிற்கோ அல்லது வேலைவாய்ப்புக்கோ விண்ணப்பிக்க முடியாது.
மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கு முன்னால், அந்த நிறுவனம் UGC-ஆல் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது டெல்லியில் தான் அதிகப்படியாக 10 போலிப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 4, கேரளாவில் 2, மகாராஷ்டிரா மற்றும் புதுச்சேரியில் தலா ஒன்று என இந்தப் பட்டியல் நீள்கிறது.