இந்தியா

சிவசேனா கட்சியை ஒழிக்க புதிய முயற்சி: உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

Published On 2022-08-04 03:47 GMT   |   Update On 2022-08-04 03:47 GMT
  • 1966-ம் ஆண்டு நிறுவப்பட்ட சிவசேனா கட்சி பல்வேறு சரிவுகளை சந்தித்துள்ளது.
  • அதிருப்தி அணி பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

மும்பை :

மறைந்த தலைவர் பால் தாக்கரேவால் 1966-ம் ஆண்டு நிறுவப்பட்ட சிவசேனா கட்சி பல்வேறு சரிவுகளை சந்தித்துள்ளது.

சக்திவாய்ந்த தலைவர்கள் பலரும் கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.

ஆனால் சமீபத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட அதிருப்தி அணி பிரிவு சிவசேனாவுக்கு கடும் பின்னடைவாக அமைந்துள்ளது.

மராட்டியத்தில் ஆட்சியில் இருந்து சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எதிர்ப்பு காரணமாக கவிழ்ந்தது. இந்த அதிருப்தி அணி பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

மேலும் உண்மையான சிவசேனா நாங்கள் தான் என கூறிவரும் அதிருப்தி அணியினர் இதற்காக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

மேலும் வரும் காலத்தில் பா.ஜனதா போன்ற சித்தாந்தம் உள்ள கட்சிகள் மட்டுமே பிழைக்கும், குடும்ப அரசியல் செய்யும் மற்ற கட்சிகள் அழிந்துவிடும் என்று பா.ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா கூறியிருந்தார்.

இதை மேற்கோள் காட்டும் வகையில் நேற்று 'மாதோஸ்ரீ' இல்லத்தில் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

சிவசேனாவை பிளவுபடுத்த பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஆனால் இப்போது கட்சியை முழுவதும் ஒழித்துக்கட்ட புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தின் வீட்டில் அமலாக்கத்துறை இயக்குனரகம் நடத்திய சோதனை கட்சியை அழிக்கும் அவர்களின் சதித்திட்டத்தின் ஒரு அங்கமாகும்.

சிவசேனா தொடர்பான வழக்கில் எனக்கு நீதித்துறை மீது முழு நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News