பழங்குடியின வாலிபர் முகத்தில் சிறுநீர் கழித்து சித்ரவதை செய்த 7 பேர் கைது
- சித்தி மாவட்டத்தில் அண்மையில் பழங்குடியின வாலிபர் மீது ஒருவர் அலட்சியமாக சிகரெட் புகைத்த படி சிறுநீர் கழிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
- சம்பவத்தில் தொடர்புடைய கும்பலை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும். இல்லையேல் போராட்டம் நடத்தப்படும் என பழங்குடியினர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர் .
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஓங்கோலை சேர்ந்தவர் நவீன். இவர் பழங்குடியினத்தை சேர்ந்தவர்.
இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆஞ்சி என்பவரும் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மீது ஓங்கோல் மற்றும் அதன் சுற்றுப்புற போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் இருவருக்கும் இடையே திடீரென பிரச்சனை ஏற்பட்டது. இதில் நவீனை அடித்து உதைக்க ஆஞ்சி முடிவு செய்தார். அதன்படி நவீனை மது குடிக்க அழைத்தார். ஓங்கோல் அரசு ஆஸ்பத்திரி பின்புறம் நவீன் சென்றார். அங்கு வைத்து ஆஞ்சி மற்றும் அவரது நண்பர்கள் 9 பேர் சேர்ந்து நவீனை சரமாரியாக தாக்கினர்.
இதில் உடல் முழுவதும் அவருக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டது. மேலும் நவீன் முகத்தில் 3 பேர் சிறுநீர் கழித்தனர். மேலும் சித்ரவதை செய்தனர். இதனை அந்த கும்பலில் ஒருவர் செல்போனில் படம் பிடித்தார்.
இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இது ஆந்திராவில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய கும்பலை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும். இல்லையேல் போராட்டம் நடத்தப்படும் என பழங்குடியினர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர் .
மத்திய பிரதேசம் மாநிலத்தில் சித்தி மாவட்டத்தில் அண்மையில் பழங்குடியின வாலிபர் மீது ஒருவர் அலட்சியமாக சிகரெட் புகைத்த படி சிறுநீர் கழிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதேபோல ஆந்திராவில் சம்பவம் நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.