இந்தியா

உ.பி. இளைஞர்கள் குடிகாரர்கள் என பேச்சு - ராகுல் நின்ற இடத்தை கங்கை நீரால் கழுவிய பா.ஜ.க.

Published On 2024-02-21 10:54 GMT   |   Update On 2024-02-21 11:40 GMT
  • உத்தரபிரதேசத்தின் எதிர்காலம் இரவில் மது அருந்தும் நபர்களுடன் நடனமாடுகிறது.
  • ராகுல் காந்தியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லி:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதியாத்திரையை நடத்தி வருகிறார். இதில் பிரதமர் மோடியையும் மத்திய அரசையும் விமர்சனம் செய்து வருகிறார்.

தற்போது உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

அமேதியில் நடந்த யாத்திரையின் போது ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறும் போது, பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் இளைஞர்கள் மது அருந்தி விட்டு சாலையில் கிடப்பதை பார்த்தேன். அங்கு இரவில் வாத்தியங்கள் முழங்குவதையும் மது அருந்திவிட்டு சாலையில் நடனமாடுவதையும் பார்த்தேன். உத்தரபிரதேசத்தின் எதிர்காலம் இரவில் மது அருந்தும் நபர்களுடன் நடனமாடுகிறது.

மறுபுறம் ராமர் கோவிலில் பிரதமர் மோடியும், அம்பானியும், அதானியும் காணப்படுவார்கள். அங்கு நீங்கள் இந்தியாவின் அனைத்து கோடீஸ்வரர்களையும் பார்ப்பீர்கள். ஆனால் ஒரு பிற்படுத்தப்பட்ட அல்லது தலித் நபரைக் கூட பார்க்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ராகுல் காந்தியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜனதாவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

ராகுல் காந்தி பேசிய இடத்தை கங்கை நீரால் பா.ஜனதாவினர் சுத்தப்படுத்தினர்.


இது குறித்து மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கூறும் போது, உத்தரபிரதேசத்தின் மீது ராகுல் காந்தியின் மனதில் எவ்வளவு விஷம் இருக்கிறது என்பதை அவரது கருத்து காட்டுகிறது. வயநாட்டில் உத்தரபிரதேச வாக்காளர்களுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளை வெளியிட்டார். ராமர் கோவில் விழாவிற்கான அழைப்பை நிராகரித்தார். தற்போது வாரணாசி மற்றும் உத்தரபிரதேச இளைஞர்கள் குறித்து அவர் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். காங்கிரசின் எதிர்காலம் இருளில் உள்ளது, ஆனால் உத்தரபிரதேசத்தின் எதிர்காலம் வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. சோனியா காந்தி தனது மகனை நல்ல முறையில் வளர்க்க முடியாவிட்டால், குறைந்தபட்சம் அவரிடம் கருத்து எதுவும் கூற வேண்டாம் என்று அறிவுரை வழங்க வேண்டும் என்றார்.

ராகுல் காந்தி யாத்திரையை அசாம் முதல்-மந்திரியும் பா.ஜனதாவை சேர்ந்தவருமான ஹிமந்தா சர்மா விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ராகுல் காந்தியின் யாத்திரை எங்கு சென்றாலும் அங்கு காங்கிரசுக்கு தோல்வியே கிடைக்கிறது. தற்போது உத்தரபிரதேசத்திற்கு சென்று இருக்கிறார்கள். அங்கு அகிலேஷ் யாதவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. யாத்திரை செல்லும் இடமெல்லாம் காங்கிரசுக்கு சரிவு ஏற்படுகிறது.

பிரதமர் மோடி என்ன செய்கிறார் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்புகிறார். மோடி கட்டிய தேசிய நெடுஞ்சாலையில் ராகுல் காந்தியும் பிரியங்காவும் ரோடு ஷோ நடத்துகிறார்கள். ராகுல் காந்தி, இந்த உலகில் பொய்யை தவிர எதுவும் கற்று கொள்ளவில்லை. அவர் பொய்யுடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு ஹிமர்தா சர்மா கூறினார்.

Tags:    

Similar News