இந்தியா

100 நாள் வேலைத்திட்ட நிதி வழங்காமல் மத்திய அரசு பாரபட்சம்: மம்தா பானர்ஜி

Published On 2023-01-17 08:46 IST   |   Update On 2023-01-17 08:46:00 IST
  • பா.ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு சரியாக நிதியை அளித்து வருகிறது.
  • மேற்கு வங்காளத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடி பாக்கி வைத்துள்ளது.

கொல்கத்தா :

மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் சாகர்டிகியில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

அதில் பேசுகையில், மத்திய அரசை மம்தா பானர்ஜி விமர்சித்தார். அவர் பேசியதாவது:-

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் எனப்படும் 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்துவதில் மேற்கு வங்காளம் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், அதற்கு தேவையான நிதியை வழங்காமல் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது. அதே சமயத்தில், பா.ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு சரியாக நிதியை அளித்து வருகிறது. மேற்கு வங்காளத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடி பாக்கி வைத்துள்ளது.மத்திய அரசின் நிதி இல்லாமல்தான் 100 நாள் வேலைத்திட்டத்தை மேற்கு வங்காள அரசு அமல்படுத்தி வருகிறது.

இதுபோல், சமீபத்தில் பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க மத்திய குழுக்களை மத்திய அரசு அனுப்பி வைத்தது. மாநில அரசை துன்புறுத்தவே அப்படி அனுப்பி வைத்தது. எந்த பா.ஜனதா தலைவரின் வீட்டில் மின்மினிப்பூச்சி நுழைந்தால் கூட மத்திய குழு அனுப்பிவைக்கப்படுகிறது. உத்தரபிரதேசத்துக்கோ, டெல்லி அல்லது குஜராத்துக்கோ ஏன் அனுப்பப்படவில்லை?

ஆனால், அற்ப விஷயங்களுக்கு கூட மேற்கு வங்காளத்துக்கு மத்திய குழுவை அனுப்புகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News