இந்தியா

மாநில அரசின் ஆலோசனையின் படிதான் கவர்னர் செயல்பட வேண்டும் - உச்ச நீதிமன்றம் அதிரடி

Published On 2025-04-08 11:08 IST   |   Update On 2025-04-08 11:08:00 IST
  • ஜனாதிபதிக்கு அனுப்ப மசோதாக்களை நிறுத்தி வைத்தால் அதிகபட்சம் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்.
  • கவர்னர் தனது விருப்பப்படி செயல்பட முடியாது, அதற்கு அரசியலமைப்பு இடமளிக்கவில்லை.

மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரம் தொடர்பாக கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை வாசிக்க தொடங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் நீதிபதிகள், மசோதாக்களை நிறுத்தி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல் சட்டப்படி தவறானது என்று கூறினர்.

மேலும் அவர்களது தீர்ப்பில், 2-வது முறையாக நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது சட்டப்படி தவறா என முடிவு செய்ய வேண்டும். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ன் கீழ் கவர்னர் தனியாக முடிவெடுக்க முடியுமா? அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200ன் படி கவர்னர் நடவடிக்கை எடுக்க என்ன வாய்ப்பு உள்ளது என்பதையும் ஆராய வேண்டும்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு நிர்ணயம் செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ன்படி கவர்னர் சுயேட்சையாக நடவடிக்கை எடுக்க முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், மசோதாவுக்கு அனுமதி வழங்க வேண்டும். இல்லையென்றால் நிராகரிக்க வேண்டும். எவ்வித காரணமும் கூறாமல் மசோதாக்களை கவர்னரால் நிறுத்தி வைக்க முடியாது. அதேபோல் தான் நிறுத்தி வைக்கும் மசோதா செல்லாது என கூற அதிகாரம் கிடையாது. கவர்னருக்கு தன்னிச்சையான வீட்டோ அதிகாரம் இல்லை. கவர்னர் ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக வெறுமனே அறிவிக்க எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. 2-வது முறையாக சமர்பிக்கப்பட்ட மசோதாவில் வேறுபாடு இருந்தால் மட்டுமே ஜனாதிபதிக்கு அனுப்ப முடியும்.

ஜனாதிபதிக்கு அனுப்ப மசோதாக்களை நிறுத்தி வைத்தால் அதிகபட்சம் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். கவர்னர் என்பவர் மாநில அரசின் ஆலோசனையின் படி செயல்பட வேண்டும் என்பது பொது விதி. கவர்னர் தனது விருப்பப்படி செயல்பட முடியாது, அதற்கு அரசியலமைப்பு இடமளிக்கவில்லை என்றனர்.

இதனிடையே, கவர்னருக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களில் ஒர மனு மட்டும் தனியாக விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News