இந்தியா

சாலையில் 6 அடி உயரத்துக்கு 38 கி.மீ. படர்ந்த பனி.. சிக்கித் தவித்த 40 ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்பு

Published On 2026-01-27 23:11 IST   |   Update On 2026-01-27 23:11:00 IST
  • 5 முதல் 6 அடி ஆழத்திற்குப் பனி குவிந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
  • சுமார் 38 கி.மீ தூரத்திற்கு மூடிக்கிடந்த பனியை இரவு பகலாக அகற்றினர்.

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவு வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தோடா மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவில் சிக்கித் தவித்த 40 ராணுவ வீரர்கள் மற்றும் 20 பொதுமக்கள் என மொத்தம் 60 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

தோடா மாவட்டத்தில் உள்ள சத்தர்காலா கணவாய் பகுதியில் கடந்த சில நாட்களாகக் கடும் பனிப்பொழிவு நிலவியது. கடல் மட்டத்திலிருந்து 10,500 அடி உயரத்தில் உள்ள இந்தப் பகுதியில் சுமார் 40 மணி நேரம் இடைவிடாது பனி கொட்டியது.

இதனால் 5 முதல் 6 அடி ஆழத்திற்குப் பனி குவிந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

ஜனவரி 24 முதல, எல்லை சாலைகள் அமைப்பு (BRO) அதிகாரிகள் சுமார் 38 கி.மீ தூரத்திற்கு மூடிக்கிடந்த பனியை இரவு பகலாக அகற்றினர்.

இந்நிலையில் அங்கு சிக்கியிருந்த 4 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த 40 ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுடன் அங்கிருந்த 20 பொதுமக்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இதேபோல், ராஜௌரி மாவட்டத்தின் கண்டி-கோத்ரங்கா பகுதியிலும் 35 கி.மீ தூரத்திற்குப் பனியை அகற்றி BRO அதிகாரிகள் போக்குவரத்தைச் சீர் செய்துள்ளனர்.

இதற்கிடையே  உதம்பூர் மாவட்டம் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜகானி-செனானி பகுதியில் இன்று காலை பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் சி.ஆர்.பி.எப் படை வீரர் உள்பட 4 பேர் பலியானார்கள். 

Tags:    

Similar News