இந்தியா

காணாமல் போன சிறுவன்.. களத்தில் இறங்கிய "லியோ".. அப்புறம் நடந்த டுவிஸ்ட்

Published On 2023-11-29 15:29 GMT   |   Update On 2023-11-29 16:32 GMT
  • அந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை.
  • போலீசார் சிறுவனை தேடும் பணியை துவங்கினர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் போவை பகுதியில் உள்ள அசோக் நகரில் ஆறு வயது சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாட சென்றான். விளையாட சென்ற சிறுவன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்வில்லை. இதையடுத்து, பெற்றோர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும், சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

உடனே காவல் நிலையம் விரைந்த பெற்றோர், தங்களின் மகன் காணாமல் போனது பற்றி புகார் அளித்தனர். காணாமல் போன சிறுவன் விளையாடி கொண்டிருந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை. இதன் காரணமாக போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சிறுவனை தேடும் பணியை துவங்கினர்.

அதன்படி மோப்ப நாய் "லியோ" சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டது. முதலில் சிறுவன் அணிந்திருந்த டி-சர்ட் ஒன்றை மோப்பம் பிடித்த லியோ, பிறகு சிறுவன் விளையாடி கொண்டிருந்த மைதானத்திற்கு அழைத்து செல்லப்பட்டது. அங்கிருந்து தேடலை துவங்கிய லியோ மைதானத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவிலேயே சிறுவனை கண்டுபிடித்து அசத்தியது.

மோப்ப நாய் தேடுதல் வேட்டையில் இறங்கிய மூன்றரை மணி நேரத்தில் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டான். அதிநவீன தொழில்நுட்ப உதவிகள் இல்லாத பட்சத்தில் போலீசார் தங்களுக்கே உரிய பாணியில் தேடுதல் வேட்டையை நடத்தியதோடு, சில மணி நேரங்களில் சிறுவனை காப்பாற்றிய சம்பவம் பொது மக்களிடையே வரவேற்பை பெற்றது. 

Tags:    

Similar News