இந்தியா

பேருந்து விபத்துக்கு சாலை அமைப்பு காரணமல்ல- துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்

Published On 2023-07-01 14:58 IST   |   Update On 2023-07-01 15:35:00 IST
  • விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கைது செய்துள்ளதாக மகாராஷ்டிர அமைச்சர் கிரிஷ் மகாஜன் கூறினார்.
  • விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் தேவைப்பட்டால் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்படும்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து புனே நகருக்கு சென்றுக் கொண்டிருந்த பேருந்து இன்று அதிகாலை 2 மணியளவில் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.

அப்போது தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் அந்த சொகுசு பஸ் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் மீண்டும் திரும்பி சாலை நடுவே இருந்த தடுப்புகளின் மீது மோதி கவிழ்ந்தது.

இதில் சொகுசு பேருந்து தீப்பிடித்தது. பேருந்துக்குள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் தீயில் கருகி பலியானார்கள். இந்த கோர விபத்தில் சிக்கி 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கைது செய்துள்ளதாக மகாராஷ்டிர அமைச்சர் கிரிஷ் மகாஜன் கூறினார். இருப்பினும், விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சம்ருத்தி நெடுஞ்சாலையில் பேருந்து விபத்துக்கு சாலை கட்டுமானம் காரணம் அல்ல என்று மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடன் இன்று புல்தானாவில் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று, காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்திக்க உள்ளோம். சம்ருத்தி நெடுஞ்சாலையில் பேருந்து விபத்துக்கு சாலை கட்டுமானம் காரணம் அல்ல.

விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் தேவைப்பட்டால் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்" என்றார்.

Tags:    

Similar News