இந்தியா

பயங்கரவாதிகளிடம் அமைதிக்கான தூதர்களை காண்கின்றனர்: மாணிக்கம் தாகூருக்கு பாஜக பதிலடி

Published On 2025-12-29 17:33 IST   |   Update On 2025-12-29 17:33:00 IST
  • நக்சல், பி.எஃப்,ஐ, சிமி உறுப்பினர்கள் போன்ற பயங்கரவாதிகளை சகோதரர்கள் என அழைக்கின்றனர்.
  • அப்சல் குரு, யாகூப் மேமன் போன்ற உண்மையான பயங்கரவாதிகளில் சமாதான தூதர்களையும் காண்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக-வின் அமைப்பு வலிமையை திக் விஜய் சிங் பாராட்டியிருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாணிக்கம் தாகூர் எம்.பி., பாஜக வெறுப்பால் கட்டமைக்கப்பட்ட அமைப்பு. அது வெறுப்பை பரப்புகிறது எனக் கூறியதுடன் தடை செய்யப்பட்ட அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் ஒப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் பாஜக தேசிய செய்தி தொடர்பாக ஷேசாத் பூனாவாலா, மாணிக்கம் தாகூர் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஷேசாத் பூனாவாலா கூறியிருப்பதாவது:-

அவர்கள் தேசியவாதிகளில் பயங்கரவாதிகளையும், அப்சல் குரு, யாகூப் மேமன் போன்ற உண்மையான பயங்கரவாதிகளில் சமாதான தூதர்களையும் காண்கின்றனர். காங்கிரஸ் தேசியவாதிகளை இழிவுப்படுத்துகிறது. நக்சல், பி.எஃப்,ஐ, சிமி உறுப்பினர்கள் போன்ற பயங்கரவாதிகளை சகோதரர்கள் என அழைக்கின்றனர். அவர்கள் இதை மட்டுமே செய்கின்றனர்.

ஆர்எஸ்எஸ் 100 ஆண்டுகளாக நாட்டை கட்டமைப்பதற்கான தனிநபர் குணநலன்களை உருவாக்குவதில் பங்களித்துள்ளது. ஆனால், காங்கிரஸ் அவதூறு மற்றும் மறைமுக குற்றச்சாட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் பயங்கரவாத அமைப்பு என்பதால், நேரு மற்றும் அவரது அரசு ஆர்எஸ்எஸ்-ஐ குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்ததா? என்பதை மாணிக்கம் தாகூர் மற்றும் காங்கிரஸ் சொல்ல வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு சென்றது ஒரு பயங்கரவாத அமைப்பின் தலைமையகத்திற்கு சென்றதா என்பதையும் காங்கிரஸ் கூற வேண்டும். மகாத்மா காந்தி, பி.ஆர். அம்பேத்கர் மற்றும் ஜெய் பிரகாஷ் நாராயண் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ்.-ஐ புகழ்ந்தபோது ஒரு பயங்கரவாத அமைப்பைப் பாராட்டினார்களா என்பது கூற வேண்டும்.

இவ்வாறு ஷேசாத் பூனாவாலா குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News