இந்தியா

ராகுல் காந்தியை திருமணம் செய்துகொள்ள சொன்னது ஏன்? - லாலுபிரசாத் விளக்கம்

Published On 2023-07-06 15:15 IST   |   Update On 2023-07-06 16:14:00 IST
  • பீகார் தலைநகர் பாட்னாவில் லாலுபிரசாத் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
  • வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு குறைந்தது 300 இடங்கள் கிடைக்கும் என்றார்.

பாட்னா:

பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக நிருபர்களைச் சந்தித்தனர். அப்போது, ராஷ்ட்ரீய ஜனதா தள நிறுவனர் லாலுபிரசாத் யாதவும் பேட்டி அளித்தார். பிரதமர் மோடியை எதிர்கொள்ள, தான் உடல்தகுதியுடன் இருப்பதாக அவர் கூறினார்.

அதன்பின், தனக்கே உரிய பாணியில் 53 வயதான ராகுல் காந்தியிடம் நகைச்சுவையாக பேசினார். அவர் கூறுகையில், திருமணம் செய்து கொள்ளுமாறு உங்களிடம் (ராகுல்) ஏற்கனவே கூறியிருக்கிறேன். ஆனால் என் அறிவுரையை நீங்கள் கேட்பது இல்லை. நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதது, உங்கள் தாயாருக்கும் (சோனியா காந்தி) கவலை அளிக்கிறது. இன்னும் காலம் இருக்கிறது. திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் திருமண ஊர்வலத்தில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறோம். நீங்கள் அணிந்துள்ள அரைக்கை சட்டை நன்றாக இருக்கிறது. மோடியின் குர்தாவுக்கு சரியான போட்டியாக இருக்கும் என்றார்.

லாலு சொன்னதைக் கேட்டு, இதர தலைவர்கள் உரக்கச் சிரித்து மகிழ்ந்தனர். வெட்கம் கலந்த புன்னகையுடன் லாலுவைப் பார்த்த ராகுல் காந்தி, நீங்களே சொல்லிவிட்டதால், அது நடக்கும் என்று கூறினார்.

இந்நிலையில், பாட்னாவில் லாலுபிரசாத் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், யார் பிரதமரானாலும் மனைவி இல்லாமல் இருக்கக் கூடாது. மனைவி இல்லாமல் பிரதமர் இல்லத்தில் தங்குவது தவறு என்றார்.

மேலும், வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என கேட்டதற்கு, குறைந்தது 300 இடங்களாவது கிடைக்கும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News