பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு - பிரதமர் மோடி இரங்கல்
- பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தபோது அங்கு சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.
- பள்ளி கட்டிடம் விழுந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பிப்லோடி தொடக்கப்பள்ளி இன்று காலை வழக்கம்போல் திறக்கப்பட்டது. பள்ளி திறந்து சிறிது நேரத்திலேயே பள்ளியின் மேற்கூரை முழுவதுமாக இடிந்து விழுந்தது.
இந்த இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு, பள்ளிக்கு வந்த அப்பகுதி கிராம மக்கள் கான்கிரீட் கற்களை அகற்றி மாணவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 17 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த மாணவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தபோது அங்கு சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. எனவே காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்பட்டது.
சம்பவ இடத்தில் போலீசார், தீயணைப்பு வீரர்கள், மீட்பு படையினர் ஆகியோரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணியில் 4 ஜே.சி.பி. எந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் பலியான மாணவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
ராஜஸ்தானில் அரசு பள்ளி இடிந்து விழுந்த விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில்,
ராஜஸ்தானில் அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து மாணவர்கள் பலியான செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பள்ளி கட்டிடம் விழுந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.