7 பேருடன் சென்ற ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
- 63 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவரை அழைத்துச் சென்றனர்.
- வாரணாசிக்கு தென்கிழக்கே 100 கடல் மைல் தொலைவில் விமானத்தின் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
விபத்து ஒன்றில் 63 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 41 வயது மதிக்கத்தக்க நோயாளியை மேல் சிகிச்சைக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்ல வேண்டி இருந்தது.
அவரை அழைத்துக்கொண்டு, 1 மருத்துவர், 1 செவிலியர், 2 உதவியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 7 பேரும் விமானம் நேற்று இரவு 7:11 மணிக்கு புறப்பட்டது.
மோசமான வானிலையைத் தவிர்க்க பாதையை மாற்ற கொல்கத்தா வான்வழி கட்டுப்பாட்டு அறையிடம் அனுமதி கேட்டுள்ளது.
அனுமதி கேட்ட சிறிது நேரத்திலேயே, அதாவது 7:34 மணிக்கு, வாரணாசிக்கு தென்கிழக்கே 100 கடல் மைல் தொலைவில் விமானத்தின் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டம் கசாரியா கிராமப்புற பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது பின்னர் தெரியவந்தது.
தகவலறிந்து மீட்புக் குழுவினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர். விமானத்தில் இருந்த 7 பேரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வந்த நோயாளி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.