இந்தியா

அதானி விவகாரத்தில் விசாரணை நடத்த பயம் ஏன்? பிரதமருக்கு ராகுல் காந்தி கேள்வி

Published On 2023-03-28 04:06 IST   |   Update On 2023-03-28 04:06:00 IST
  • அதானி விவகாரத்தில் விசாரணை நடத்த இவ்வளவு பயம் ஏன் என பிரதமருக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
  • அதானி பிரச்சினையை தொடர்ந்து எழுப்பிக்கொண்டு இருப்பேன் என அவர் கூறியிருந்தார்.

புதுடெல்லி:

இந்தியாவின் பிரபல தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான அதானிக்குச் சொந்தமான நிறுவனங்கள், பங்குச் சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாகவும், கணக்குகளில் முறைகேடு செய்ததாகவும் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது. இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பி இருக்கிறது.

இதுதொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்தவேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

அதானி பிரச்சினையை முன்வைத்து மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குறைகூறி வருகிறார். இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், அதானி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை மீண்டும் அவர் சாடியுள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எல்.ஐ.சி.யின் மூலதனம் அதானிக்கு. பாரத ஸ்டேட் வங்கியின் மூலதனம் அதானிக்கு. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலதனம் அதானிக்கு. அதானி முறைகேடு வெளிச்சத்துக்கு வந்த பிறகும் பொதுமக்களின் ஓய்வூதிய பணம் ஏன் அதானியின் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது? என கேள்வி எழுப்பினார்.

திரு.பிரதமரே விசாரணை இல்லை, பதில் இல்லை. ஏன் இவ்வளவு பயம்?' எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது வாழ்நாள் முழுவதும் பாராளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்தாலும், அதானி பிரச்சினையை தொடர்ந்து எழுப்பிக்கொண்டு இருப்பேன் என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News