ஒரு நாட்டை சார்ந்து இருக்கக்கூடாது என்பதற்கு இது விழிப்புணர்வு அழைப்பு- ரகுராம் ராஜன் எச்சரிக்கை
- இன்றைய உலக ஒழுங்கில் வர்த்தகம், முதலீடு மற்றும் நிதி ஆகியவை ஆயுதமயமாக்கப்பட்டுள்ளன.
- இந்திய ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடுமையான வரிகள் வருத்தத்தை அளிக்கிறது.
இந்தியா உள்பட 70 நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு கடந்த 1-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக வரிகளை உயர்த்தினார். இந்திய பொருட்கள் மீது 25 சதவீத வரி விதித்தார். இந்த வரிவிதிப்பு கடந்த 7-ந்தேதி அமலுக்கு வந்தது.
மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ராணுவ சாதனங்கள் ஆகியவை வாங்குவதற்கு அபராதமாக இந்திய பொருட்கள் மீது மேலும் 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி 27-ந்தேதி அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இந்திய பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர்ந்தது. அதன்படி, இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி நேற்று அமலுக்கு வந்தது.
50 சதவீத வரிவிதிப்பு காரணமாக, இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் ஜவுளி பொருட்கள், ஆயத்த ஆடைகள், இறால், தோல், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், விலங்கு பொருட்கள், ரசாயனங்கள், மின்சார எந்திரங்கள், என்ஜினீயரிங் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
மொத்தம் 4 ஆயிரத்து 820 கோடி டாலர் மதிப்புள்ள இந்திய பொருட்கள் ஏற்றுமதி பாதிப்பை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறுகையில்,
இன்றைய உலக ஒழுங்கில் வர்த்தகம், முதலீடு மற்றும் நிதி ஆகியவை ஆயுதமயமாக்கப்பட்டுள்ளன. இந்தியா கவனமாக நடக்க வேண்டும்.
இந்திய ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடுமையான வரிகள் வருத்தத்தை அளிக்கிறது. எந்தவொரு ஒற்றை வர்த்தக கூட்டாளியையும் சார்ந்திருப்பதை குறைக்க இந்தியாவுக்கு இது ஒரு தெளிவான விழிப்புணர்வு அழைப்பு.
நாம் எந்த ஒரு நாட்டையும் பெரிய அளவில் சார்ந்து இருக்கக்கூடாது. கிழக்கு, ஐரோப்பா, ஆப்பிரிக்காவைப் பார்த்து, அமெரிக்காவுடன் தொடர்வோம். ஆனால் நமது இளைஞர்களை வேலைக்கு அமர்த்துவதற்குத் தேவையான 8–8.5% வளர்ச்சியை அடைய உதவும் சீர்திருத்தங்களை கட்டவிழ்த்து விடுவோம்.
ரஷியாவின் எண்ணெய் இறக்குமதி தொடர்பான தனது கொள்கையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.