இந்தியா

கைதி மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றிய சிறை அதிகாரி: மனித உரிமை அமைப்பு வழக்குப்பதிவு

Published On 2023-11-18 03:55 GMT   |   Update On 2023-11-18 03:55 GMT
  • யோன் ஜான்சன் என்பவர் கடந்த 4 மாதங்களாக கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.
  • சிறையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கேயே அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ளது பூஜப்புரா மத்திய சிறை. இங்கு ஏராளமான தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் லியோன் ஜான்சன் என்பவர் கடந்த 4 மாதங்களாக கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தன்று காலை லியோன் ஜான்சன் சிறையில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது அதில் முடி கிடந்ததாக கூறப்படுகிறது. அதுகுறித்து உணவு சப்ளைக்கு பொறுப்பு வகிக்கும் சிறை அதிகாரியிடம் அவர் கேட்டுள்ளார்.

அதில் ஆத்திரமடைந்த அந்த அதிகாரி, கொதிக்கும் தண்ணீரை லியோன் ஜான்சனின் மீது ஊற்றினார். இதில் படுகாயமடைந்த அவர் வலியால் துடித்தார். அவர் சிறையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கேயே அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

லியோன் ஜான்சனின் மீது சிறை அதிகாரி கொதிக்கும் தண்ணீரை ஊற்றியது குறித்து அவரது நண்பர், கேரள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் விசாரணை நடத்தப்பட்டது.

கைதி மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றிய சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிந்தது. இந்த வழக்கு பி.எம்.ஜி. சந்திப்பில் உள்ள மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு புஜப்புரா மத்திய சிறையின் சூப்பிரண்டுக்கு, மாநில மனித உரிமை ஆணைய செயல் தலைவர் பைஜூ நாத் உத்தரவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News