இந்தியா

100-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சி: பிரதமர் மோடி உரை 4 லட்சம் இடங்களில் ஒலிபரப்பு

Published On 2023-04-30 06:20 GMT   |   Update On 2023-04-30 06:20 GMT
  • பிரதமரின் 100-வது மனதில் குரல் நிகழ்ச்சியையொட்டி டெல்லி தேசிய நவீன கலைக்கூடத்தில் ஜனசக்தி கண்காட்சியும் நடத்தப்பட்டது.
  • நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகம் மற்றும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சங்கத்தின் சார்பாக நியூஜெர்சி நகரிலும் பிரதமரின் உரை ஒலிபரப்பானது.

புதுடெல்லி:

நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மனதின் குரல் (மன் கி பாத்) என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந்தேதி முதல் மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக ரேடியோவில் பேசி வருகிறார்.

தனது உரையின்போது அந்த மாதம் நடைபெறும் நிகழ்வுகள், சாதனைகள், தனி நபரின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நாட்டு மக்களிடம் அவர் பகிர்ந்து கொள்வார்.

மேலும் மனதின் குரல் குறித்து நாட்டு மக்களிடம் கருத்துக்களையும் கேட்டு அதற்கு ஏற்ற வகையிலும் உரையாடி வருகிறார். பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வர வேற்பை பெற்றது.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அவரது வானொலி உரையை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பு செய்யப்பட்டது. காலை 11 மணி முதல் 11.30 மணி வரை அவரது மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பானது.

100-வது அத்தியாயம் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அவர் இந்தியில் உரையாற்றியது 22 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் கேட்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதோடு ஆங்கிலம் உள்ளிட்ட 12 வெளிநாட்டு மொழிகளிலும் ஒலிபரப்பானது. பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் 100-வது அத்தியாயத்தையொட்டி விசேஷ கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அலுவலகம் மற்றும் தெருக்களில் மோடியின் உரையை கேட்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியை மக்கள் கேட்பதற்காக நாடு முழுவதும் 4 லட்சம் இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியை நாடு முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் கேட்ட னர். இந்த நிகழ்ச்சி 3 தனியார் பண்பலை உள்பட ஆயிரம் வானொலி நிலையங்கள் மற்றும் பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் குறைந்தபட்சம் 100 இடங்களில் இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்பட்டது. அனைத்து மாநிலங்களில் உள்ள கவர்னர் மாளிகைகளிலும் மனதின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பத்ம விருது பெற்றவர்கள், முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்த நிகழ்ச்சியை கேட்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

பிரதமரின் 100-வது மனதில் குரல் நிகழ்ச்சியையொட்டி டெல்லி தேசிய நவீன கலைக்கூடத்தில் ஜனசக்தி கண்காட்சியும் நடத்தப்பட்டது.

100-வது மன் கி பாத் நிகழ்ச்சியையொட்டி சிறப்பு அஞ்சல் தலை மற்றும் 100 ரூபாய் நாணயத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சமீபத்தில் வெளியிட்டார். இந்த நாணயம் மற்றும் அஞ்சல் தலையில் மனதின் குரல் நிகழச்சியின் லோகோ அச்சிடப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்திலும் பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்பட்டது. அங்குள்ள நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு ஒலிபரப்பானது.

மேலும் நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகம் மற்றும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சங்கத்தின் சார்பாக நியூஜெர்சி நகரிலும் பிரதமரின் உரை ஒலிபரப்பானது.

இதே போல லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்பட்டது.

மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது தொகுப்பை கேட்க தயாராக இருங்கள். உண்மையிலேயே சிறப்பான பயணமாக இருந்து இருக்கிறது. மக்களின் கூட்டு உணர்வை கொண்டாடி உள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரும், மைக்ரோ சாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், "சுகாதாரம், தூய்மை, பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் நிலையான வளர்ச்சி, இலக்கு தொடர்புடைய இதர பிரச்சினைகளுக்கு தீர்வு காண மனதில் குரல் நிகழ்ச்சி ஊக்கமளித்து வருகிறது. 100-வது நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News