உபரி வருவாயில் ஒடிசா 3ஆவது பெரிய மாநிலம்: முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் பெருமிதம்
- கவனமான திட்டமிடல், விவேகமான நிதி மேலாண்மை மற்றும் 5T ஆளுகை மூலம் உபரி வருவாய் ஈட்டலை விரிவுபடுத்தியுள்ளது.
- வருவாய் தொடர்ந்து அதிகரிப்பது, மத்திய மானியங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க உதவியது.
ஒடிசா மாநிலம் 2022-23 நிதியாண்டில் உபரி வருவாய் ஈட்டியதில் இந்தியாவின் 3ஆவது பெரிய மாநிலம் என சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 19,456 கோடி ரூபாய் உபரி வருவாய் ஈட்டியது பெருமிதம் என பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
2000ஆம் ஆண்டில் இருந்து 24 வருடம் நவீன் பட்நாயக் ஒடிசா மாநில முதல்வராக இருந்துள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
"விவேகமான நிதி மேலாண்மையுடன், 2022-23 ஆம் ஆண்டில் வருவாய் உபரியைக் கொண்ட முன்னணி மாநிலங்களில் ஒடிசாவும் ஒன்று என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் "கவனமான திட்டமிடல், விவேகமான நிதி மேலாண்மை மற்றும் 5T ஆளுகை மூலம் ஒடிசா அதன் சொந்த வளங்களில் இருந்து வருவாய் ஈட்டலை விரிவுபடுத்தியுள்ளது. வருவாய் தொடர்ந்து அதிகரிப்பது, மத்திய மானியங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், ஏராளமான நலத்திட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லவும் மாநிலத்திற்கு உதவியுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.