இந்தியா

ஆபரேசன் சிந்தூர்: பயங்கரவாத முகாம்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியீடு

Published On 2025-05-08 13:57 IST   |   Update On 2025-05-08 13:57:00 IST
  • 9 பயங்கரவாத முகாம்களில் இந்திய ராணுவம் துல்லியமாக தாக்குதல்களை நடத்தியது.
  • பஹவல்பூரில் உள்ள ஜாமியா மசூதி தாக்குதலுக்கு பின்னர் பெரும் சேதமடைந்துள்ளது.

'ஆபரேசன் சிந்தூர்' என்ற திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களில் இந்திய ராணுவம் துல்லியமாக தாக்குதல்களை நடத்தியது.

இதன் பின்னர் அங்கு ஏற்பட்டுள்ள அழிவின் நிலைகள் செயற்கை கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

மாக்சர் டெக்னாலஜிஸ் வெளியிட்ட ஒப்பீட்டு செயற்கைக்கோள் படங்கள் முக்கியமான இடங்களில் கணிசமான கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள சேதத்தை காட்டுகிறது.

குறிப்பாக பஹவல்பூரில் உள்ள ஜாமியா மசூதி மற்றும் பாகிஸ்தானின் முரிட்கே நகரத்திற்குள் குறிவைக்கப்பட்டன.

82 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருந்த இந்த வளாகம், பாகிஸ்தானின் பஞ்சாப், ஷேக்குபுராவின் முரிட்கே, நங்கல் சஹ்தானில் அமைந்துள்ள 'அல்மா மேட்டர்' மற்றும் லஷ்கர் இ-தொய்பாவின் மிக முக்கியமான பயிற்சி மையமாக இருந்தது.

இதேபோல், பஹவல்பூரில் உள்ள ஜாமியா மசூதியும் தாக்குதலுக்கு பின்னர் பெரும் சேதமடைந்துள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பஹவல்பூர் மாவட்டத்தில் உள்ள கராச்சி மோரில் பஹவல்பூரின் புறநகரில் உள்ள என்.எச்.-5 (கராச்சி-டோர்காம் நெடுஞ்சாலை) இல் சுப்ஹான் அல்லா மர்கஸ் அமைந்துள்ளது. 15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இங்கு இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு போதனைகள் செய்யப்பட்டுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமதுவின் முக்கிய மையமாக இந்த இடம் இருந்தது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 9 பயங்கரவாத தளங்களை இந்திய ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி அழித்தது.

பாகிஸ்தான் எல்லைக் குள் உள்ள 4 இடங்களில் இந்திய விமானப்படை துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. அதே நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 5 இடங்கள் குறி வைக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

சிந்தூர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இடங்களின் படங்கள் அனைத்தும் செயற்கைகோள் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Tags:    

Similar News