முதல்வர் மாற்றம் தொடர்பாக உயர்மட்டத்தில் இருந்து நாங்கள் எந்த தகவலும் பெறவில்லை: பரமேஷ்வரா
- நவம்பர் புரட்சி உள்ளிட்ட எதையும் பற்றி நான் அறிந்திருக்கவில்லை.
- நாங்கள் உயர்மட்டக்குழுவின் முடிவைப் பற்றி பேச முடியாது.
கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் ஆட்சியை பிடித்தபோது, இரண்டரை வருடம் சித்தராமையா முதல்வராக இருப்பார், இரண்டரை வருடம் டி.கே. சிவக்குமார் முதல்வராக இருப்பார் என முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி வருகிற நவம்பர் மாதத்துடன் முதல் இரண்டரை வருடம் நிறைவடைகிறது. இதனால் சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலகுவார். டி.கே. சிவக்குமார் முதல்வராக பதவி ஏற்பார் எனக் கூறப்படுகிறது. இதை சிலர் நவம்பர் புரட்சி என அழைக்கின்றனர்.
இதற்கிடையே, சித்தராமையா மகன், தனது தந்தை அரசியல் வாழ்க்கையில் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார் எனக் கூறியதுடன், மற்றொரு அமைச்சர் குறித்து பேசினார். இதனால் சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலகினார். டி.கே. சிவக்குமாருடன் மேலும் சிலர் போட்டிக்கு நிற்பார்கள் எனத் தெரிகிறது.
இதனால் கர்நாடக மாநில காங்கிரசில் ஒரு குழப்பமான நிலை நிலவுகிறது. இந்த நிலையில், மேலிடத்தில் (காங்கிஸ் உயர்மட்டக்குழு) இருந்து நாங்கள் அதுபோன்ற எந்த தகவலையும் பெறவில்லை என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பரமேஷ்வரா கூறியதாவது:-
நவம்பர் புரட்சி உள்ளிட்ட எதையும் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. நாங்கள் உயர்மட்டக்குழுவின் முடிவைப் பற்றி பேச முடியாது. அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தேவையில்லாமல் மீடியாக்கள் முன் கருத்து தெரிவிப்பது, கூடுதல் குழப்பத்திற்கு வழிவகுக்கும். உயர்மட்ட குழுவில் இருந்து தற்போது வரை யாராவது இதுபற்றி பேசியிருக்கிறார்களா?. நாங்கள் உயர்மட்டக்குழுவில் இருந்து எந்தவொரு தகவலையும் பெறவில்லை.
நாங்கள் ஏதாவது தகவலை பெற்றிருந்தால்தான், பதில் கூற முடியும். உயர்மட்டுக்குழு முடிவு செய்யும்வரை, எங்களுடைய கருத்துகள் முக்கியத்தும் வாய்ந்ததாக இருக்காது.
இவ்வாறு பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.