இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் குறித்த தகவல்கள் கசிவு: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கடற்படை ஊழியர் கைது

Published On 2025-06-26 11:12 IST   |   Update On 2025-06-26 11:12:00 IST
  • ஆபரேஷன் சிந்தூர் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்டதாக கடற்படை ஊழியர் ஒருவர் சிக்கி உள்ளார்.
  • தகவல்களை பகிர்வதற்காக பிரியா சர்மாவிடம் இருந்து பணம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

காஷ்மீரின் பகல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் புகுந்து அங்கிருந்த 9 தீவிரவாத முகாம்களை அழித்தது.

இதில் அந்த முகாம்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பெண் யூ-டியூபர் ஜோதி மல்கோத்ரா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் புலனாய்வு அமைப்பினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதில் ராஜஸ்தான் சி.ஐ.டி. புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்டதாக கடற்படை ஊழியர் ஒருவர் சிக்கி உள்ளார்.

அரியானாவை சேர்ந்த விஷால் யாதவ் என்ற அந்த கடற்படை ஊழியர் டெல்லியில் உள்ள கடற்படை தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்த பிரியா சர்மா என்று கூறிக்கொள்ளும் பெண்ணுடன் சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

இவர் இந்திய பாதுகாப்பு குறித்த தகவல்களை பகிர்வதற்காக பிரியா சர்மாவிடம் இருந்து பணம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. ஆன்-லைன் விளையாட்டுகளில் அடிமையான விஷால் யாதவ் அதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டுவதற்காக பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு உளவு பார்த்தது தெரிய வந்தது.

மேலும் கிரிப்டோ கரன்சி மூலமாகவும், தனது வங்கி கணக்கிலும் நேரடியாக பணம் பெற்றதை உறுதி செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரிடம் இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு யார், யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News