கொலை வழக்கு- கர்நாடகாவில் 200 முஸ்லிம் காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜினாமா
- அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரசில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
- ராஜினாமா முடிவை ஒரு வாரம் ஒத்திவைத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா கொலுத்தமஜ்லு என்ற கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்ரகீம் என்கிற இம்தியாஸ் (32).
இவர் இந்த பகுதியில் உள்ள ஜூம்மா மசூதி செயலாளராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை மர்ம நபர்கள் சிலர் வெட்டி கொலை செய்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவியது. மேலும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த கொலை வழக்கு விசாரணையை அரசு தவறாக கையாண்டதாகவும், மங்களூரு, உடுப்பி, சிவமொக்கா மாவட்டங்களில் தொடர்ச்சியான பழிவாங்கும் கொலைகளை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்று காங்கிரசில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் அரசு இந்த கொலை வழக்குகளை கையாண்ட விதத்தை கண்டித்து மங்களூரு ஷாதி மஹாலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.
அப்போது தட்சிண கன்னட கொலை வழக்கை சரியாக விசாரிக்காத காங்கிரஸ் அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக கன்னட காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் எம்.எஸ்.முகம்மது மற்றும் தட்சிண கன்னட சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சாகுல் அமீது ஆகியார் அறிவித்தனர்.
அவர்களை தொடர்ந்து 8 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பல முஸ்லிம் மாநகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் உள்பட 200 பேர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து விட்டதாக அறிவித்தனர்.
மேலும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் கட்சி அலுவலகத்துக்கு திரும்ப செல்லமாட்டோம் என்று அறிவித்துள்ளனர். ஆனால் எழுத்து பூர்வ ராஜினாமா கடிதம் கொடுக்கபடவில்லை. இதற்கிடையே ராஜினாமா முடிவை ஒரு வாரம் ஒத்திவைத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.