இந்தியா

கிழிந்த நிலை 'பேஷன்' பேண்டை ஊசியால் தைத்ததால் வாலிபர் தற்கொலை முயற்சி- வீடியோ வைரல் ஆனதால் விபரீதம்

Published On 2024-11-23 07:26 IST   |   Update On 2024-11-23 07:26:00 IST
  • நவ நாகரீக ஜீன்ஸ் பேண்டை பார்த்து இதுபோன்று ஆடைகள் அணிந்து வரக்கூடாது என்று அவர்கள் அறிவுறுத்தினர்.
  • ஒரு கடையில் கோணி ஊசி மற்றும் சணலை வாங்கினர்.

மங்களூரு:

இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் நாகரீக மோகம் அதிகமாக உள்ளது என்றால் மிகையல்ல. புள்ளிங்கோ ஸ்டைல் தலைமுடி வைத்துக்கொள்வது, வித,விதமான டாட்டூகளை உடலில் போட்டுக்கொள்வது, கிழிக்கப்பட்ட நிலையில் உள்ள ஜீன்ஸ் பேண்ட்டுகள் அணிவதை நவ நாகரீகமாக கருதும் மனநிலை உள்ளது.

இதற்கு ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவிக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

அதுபோல் கர்நாடகத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா பனகஜே பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷாகிப். இவரது மகன் சாகீல்(வயது 21). இவர் நேற்று முன்தினம் பெல்தங்கடி டவுனுக்கு வந்தார். அப்போது அவர் நவநாகரீக முறையில் ஆடைகள் அணிந்திருந்தார். வெள்ளை நிற 'டி-சர்ட்' மற்றும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட் நவநாகரீக முறையில் ஆங்காங்கே கிழிந்த நிலையில் இருந்தது. மேலும் தொடை பகுதியில் சல்லடை வைத்தார்போல் கிழித்து வைக்கப்பட்டு இருந்தது. பெல்தங்கடி டவுனுக்கு வந்த சாகீல் சந்தேகட்டே மார்க்கெட்டுக்கு சென்றார். அவர் மார்க்கெட்டில் அங்கும், இங்குமாக சுற்றித்திரிந்து தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த லாயிலா கிராமம் புத்ரபைலு பகுதியைச் சேர்ந்த சபீர், அனீஷ் பனகஜே, பாப் ஜான் சாகேப் ஆகிய 3 பேரும் சேர்ந்து சாகீலை வழிமறித்தனர்.

பின்னர் அவர் அணிந்திருந்த நவ நாகரீக ஜீன்ஸ் பேண்டை பார்த்து இதுபோன்று ஆடைகள் அணிந்து வரக்கூடாது என்று அவர்கள் அறிவுறுத்தினர்.

அப்போது சாகீலுக்கும், சபீர் உள்ளிட்ட 3 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சபீர் உள்ளிட்ட 3 பேரும் சாகீலை வசமாக பிடித்து வைத்துக் கொண்டனர். அதையடுத்து அவர்கள் அங்குள்ள ஒரு கடையில் கோணி ஊசி மற்றும் சணலை வாங்கினர்.

பின்னர் சாகீலை பின்னால் இருந்து கைகளை மடக்கிப்பிடித்தபடி ஒருவர் பிடித்துக் கொள்ள இன்னொருவர் கோணி ஊசி மற்றும் சணலை கோர்த்து அவரது ஜீன்ஸ் பேண்ட்டை தைத்தார்.

இந்த நிகழ்வை இன்னொருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். பேண்ட் கிழிந்திருந்த பகுதிகளை தைத்த பின்னர் அவர்கள் சாகீலை விடுவித்தனர்.

பின்னர் அந்த வீடியோவை அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் மன வேதனை அடைந்த சாகீல், தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார்.

இந்த நிலையில் வீட்டுக்கு வந்த அவரது வீட்டின் கார் டிரைவர், சாகீலை மீட்டார். பின்னர் இதுபற்றி அவர் சாகீலின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த அவர்கள் விரைந்து வந்து சாகீலை மீட்டு சிகிச்சைக்காக பெல்தங்கடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

தற்போது சாகீல் மேல்சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இதுவரை போலீசில் சாகீல் தரப்பில் புகார் அளிக்கவில்லை. இருப்பினும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News