ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.6 கோடி பரிசு - கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு
- 2028 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது
- இது விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு.
கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 6 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
கர்நாடக ஒலிம்பிக் அசோசியேஷன் சார்பில் 'கர்நாடக ஒலிம்பிக் - 2025' விருது வழங்கும் விழா நேற்று பெங்களூரில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் சித்தராமையா, விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
அப்போது பேசிய சித்தராமையா, "காங்கிரஸ் அரசு விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 6 கோடி ரூபாயும், வெள்ளி பதக்கம் வென்றால் 4 கோடி ரூபாயும், வெண்கல பதக்கம் வென்றால் 3 கோடி ரூபாயும் பரிசாக தரப்படும். இது, விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு. கர்நாடக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வெல்வர் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.
மேலும், பேசிய அவர், "அரசு வேலைகளில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. காவல்துறையில் 2 சதவீதமும் வனத்துறையில் 3 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, விளையாட்டு துறையில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
2028 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.