எதிர்க்கட்சிகளுடனான விவாதம் சிறப்பான முறையில் இருக்க விரும்புகிறேன் - பிரதமர் மோடி
- நாட்டின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை.
- உலக சந்தைகளின் கதவுகள் இந்தியாவுக்காக திறந்து விடப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளித்து பேசி வருகிறார். எப்ஸ்டீன் கோப்புகள், வர்த்தக ஒப்பந்தம் என பல விவகாரங்கள் குறித்து பேச அனுமதிக்கப்படாததை அடுத்து, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்.
எனினும், அவையில் பிரதமர் மோடி பேசத் தொடங்கியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "விக்சித் பாரத் பயணத்தில், கடந்த ஆண்டுகள் நாட்டின் விரைவான வளர்ச்சிக்குரிய ஆண்டுகளாக இருந்துள்ளன. இது வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் மாற்றங்கள் ஏற்பட்ட ஒரு காலகட்டமாக இருந்துள்ளது. நாடு சரியான திசையில் அதிவேகமாக முன்னேறிச் செல்கிறது."
"கார்கே ஜியின் வயதைக் கருத்தில் கொண்டு, அவருக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாத வகையில், அவரை அமர்ந்தபடியே முழக்கமிட அனுமதிக்க வேண்டும் என்று, உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். பின்னால் இளைஞர்கள் இருக்கிறார்கள். எனவே, கார்கே-ஜி அமர்ந்தபடியே முழக்கமிட தயவுசெய்து அனுமதி அளியுங்கள்."
"இளம் திறமையாளர்கள் நிறைந்த நாடாக இந்தியா தற்போது இருக்கிறது. முழக்கங்களை எழுப்பியதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் களைந்துவிட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எப்போது ஓடிக் கொண்டே இருக்க முடியாது, பதில் சொல்ல வேண்டும். எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி அரசியல் செய்கின்றன. நாட்டிற்கான அரசியலை செய்யவில்லை."
"காங்கிரஸ் கட்சிக்கு நாட்டின் வளர்ச்சி பற்றி ஆழ்ந்த சிந்தனையோ, தொலைநோக்கு பார்வையோ இல்லை. காங்கிரஸ் கட்சியின் முந்தைய பிரதமர்களுக்கு தொலைநோக்கு பார்வை இருந்ததில்லை. நாட்டின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை."
"அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளோம். எதிர்கால தேவைக்கான வர்த்தக ஒப்பந்தத்தை தற்போது இந்தியா மேற்கொண்டிருக்கிறது. இந்தியாவின் இளைஞர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உலக சந்தைகளின் கதவுகள் இந்தியாவுக்காக திறந்து விடப்பட்டுள்ளன."
"உலகின் பெரிய பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா வேகமாக வளர்கிறது. எதிர்க்கட்சிகளுடனான விவாதம் இன்னும் சிறப்பான முறையில் இருக்க விரும்புகிறேன். மோசான காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேற்கு வங்கத்தில் ஒரு கொடுங்கோல் ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை பாதுகாக்க நீதிமன்றம் சென்றிருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ்," என்றார்.