இந்தியா

போலி குற்றச்சாட்டால் 2 ஆண்டு சிறைவாசம்- அரசாங்கத்திடம் ரூ.10,000 கோடி நஷ்ட ஈடு கேட்கும் நபர்

Published On 2023-01-04 13:36 GMT   |   Update On 2023-01-04 13:36 GMT
  • மத்திய பிரதேச அரசுக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் காந்து வழக்கு தொடர்ந்து உள்ளார்.
  • கடவுள் கொடுத்த வரமான பாலியல் இன்பம் அடைய விடாமல் தடுத்துவிட்டதாக மனுவில் கூறி உள்ளார்

போபால்:

மத்திய பிரதேசம் ரத்லமில் உள்ள பழங்குடியின இனத்தை சேர்ந்தவர் காந்து, கான்டிலால் பீல் (வயது 35). இவர் மீது கடந்த 2018ம் ஆண்டு ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்தார். சகோதரரின் வீட்டில் கொண்டு விடுவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் வேறு ஒரு நபரிடம் விட்டுச் சென்று, அந்த நபர் 6 மாதமாக தன்னை சீரழித்தாகவும் அந்த பெண் தனது புகார் மனுவில் கூறியிருந்தார். அதன்பேரில் காந்துவை கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

சுமார் 2 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவரை நீதிமன்றம் விடுதலை செயத்து. இதையடுத்து போலி குற்றச்சாட்டில் தன்னை சுமார் 2 ஆண்டுகள் சிறையில் அடைத்ததற்காக, 10,006 கோடி ரூபாய் இழப்பீடு கோரி, மத்திய பிரதேச அரசுக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் காந்து வழக்கு தொடர்ந்து உள்ளார்.

சிறைவாசத்தால் அவரது குடும்பம் பசி பட்டினியால் வாடியதாகவும், சிறையில் துன்பமும் மன வேதனையும் அடைந்ததாகவும் மனுவில் கூறி உள்ளார். மனித உயிர் விலை மதிப்பற்றது என்று குறிப்பிட்டுள்ள அவர், தனக்கு ஏற்பட்ட பல்வேறு இழப்புகள், கடவுள் கொடுத்த வரமான பாலியல் இன்பம் அடைய விடாமல் தடுத்தல், வழக்கு செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ரூ.10,006 கோடி இழப்பீடு கேட்டுள்ளார். இந்த வழக்கு 10ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

Tags:    

Similar News