இந்தியா

ரெயில்வேயின் செயல் திறனை மேம்படுத்துவது அவசர தேவை: மம்தா பானர்ஜி திட்டவட்டம்

Published On 2023-06-04 09:03 IST   |   Update On 2023-06-04 09:03:00 IST
  • உலகையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் 288 பேர் பலியாகி உள்ளனர்.
  • சுமார் 900 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாலசோர் :

மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்துசென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு விபத்துக்குள்ளாகின. உலகையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் 288 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 900 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து நடந்த பகுதியை மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நேரில் பார்வையிட்டார். மேலும் விபத்துக்கான காரணங்கள் குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

முன்னாள் ரெயில்வே மந்திரியான மம்தா பானர்ஜி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ரெயில்வேயின் செயல் திறனை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

விபத்து நடந்த வழித்தடத்தில் மோதல் தடுப்பு கருவி இல்லை. அது இருந்திருந்தால் இந்த பேரழிவு தடுக்கப்பட்டிருக்கும். ஒரு முன்னாள் ரெயில்வே மந்திரி என்ற முறையில் இந்த துறையின் உள் செயல்பாடுகள் எனக்கு தெரியும். அப்பாவி மக்களின் உயிரை ஆபத்தில் ஆழ்த்தும் இதுபோன்ற விபத்துகளை தடுப்பதற்கு சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம். ரெயில்வேயின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசர தேவை ஆகும்.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

முன்னதாக டாக்டர்கள், நர்சுகள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய 50 பேர் கொண்ட மேற்கு வங்காள குழு விபத்து நடந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேலும் 110 ஆம்புலன்ஸ்கள் மற்றும் உபகரணங்களும் விபத்து நடந்த இடத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

விபத்தில் சிக்கிய ரெயிலில் இருந்த 60 சதவீத பயணிகள் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் எனக்கூறிய அவர், இந்த விபத்தில் உயிரிழந்த மேற்கு வங்காளத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

Tags:    

Similar News