சாவர்க்கருக்கு உரிய அங்கீகாரம் ஒருபோதும் கிடைக்கவில்லை: மத்திய மந்திரி அமித் ஷா
- அந்தமானில் வீர சாவர்க்கர் சிலையை உள்துறை மந்திரி அமித்ஷா திறந்துவைத்தார்.
- சாவர்க்கரைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் பூங்கா ஒன்றையும் தொடங்கி வைத்தார்.
ஸ்ரீவிஜயபுரம்:
சாவர்க்கரின் புகழ்பெற்ற கவிதையான 'சாகரா ப்ராண்' எழுதப்பட்டு 116வது ஆண்டு நிறைவை ஒட்டி, உள்துறை மந்திரி அமித் ஷா இன்று அந்தமான் நிகோபர் தீவுக்குச் சென்றார்.
தெற்கு அந்தமானில் உள்ள பியோத்னாபாத் என்ற இடத்தில் நிறுவப்பட்ட வீர சாவர்க்கர் சிலையை உள்துறை மந்திரி அமித்ஷா திறந்துவைத்தார். அதன்பின், சாவர்க்கரைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் பூங்கா ஒன்றையும் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். அப்போது உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது:
அந்தமான் நிகோபர் தீவுகள் ஒரு தீவுக்கூட்டம் அல்ல. சுதந்திரப் போராட்ட வீரர்களின் தவம், தியாகம், அர்ப்பணிப்பு, தேசபக்தியால் உருவான ஒரு புனித பூமி.
நாட்டில் தீண்டாமையை ஒழிக்க, வீர சாவர்க்கர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஒருபோதும் அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
அவர் தமது காலத்தில் ஹிந்து சமூகத்தில் இருந்த தீமைகளை எதிர்த்து துணிச்சலுடன் போராடினார். சமூகத்தின் எதிர்ப்பு அவருக்கு இருந்தாலும் அவர் தொடர்ந்து போராடிக் கொண்டே இருந்தார்.
வீர சாவர்க்கர் ஒரு சமூக சீர்திருத்தவாதி. பிறப்பிலே ஒரு உண்மையான தேசபக்தர்.
சுதந்திரத்துக்கு முன், அந்தமான் நிகோபர் சிறைக்கு கொண்டு வரப்பட்ட நபர், அங்கிருந்து திரும்பி வந்தாலும் அவர்களின் மனம், ஆன்மா அழிக்கப்பட்டு, ஒருபோதும் அசல் வடிவத்திற்கு திரும்ப முடியாது.
ஆனாலும், வீர சாவர்க்கர் தமது வாழ்க்கையின் கடினமான நாட்களை இங்கே கழித்ததால் இந்தியருக்கு ஒரு தீர்த்த ஸ்தலமாக மாறிவிட்டது. இந்த இடம், மற்றொரு சுதந்திர போராட்ட வீரரான நேதாஜியின் நினைவுடனும் இணைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
சாவர்க்கர் 1911-ம் ஆண்டு ஸ்ரீ விஜயபுரம் என அழைக்கப்படும் போர்ட் பிளேயரில் ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.