மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.. மம்தா தொகுதியில் 4 மடங்கு அதிக வாக்குகள் நீக்கம்
- பாஜக மாநில தலைவர் சுவேந்து அதிகாரியின் தொகுதியான நந்திகிராமில் 10,599 வாக்குகள் மட்டுமே நீக்கப்பட்டன.
- முதல்வர் மம்தா பானர்ஜி பிரதிநிதித்துவப்படுத்தும் பவானிபூர் தொகுதியில், 44,787 வாக்குகள் நீக்கப்பட்டன.
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தமிழகத்தை போல கடந்த நவம்பர் 4 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த செயல்முறையில் தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் 58 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நீக்கியுள்ளது. நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
அதன்படி, பாஜக மாநில தலைவரும் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரியின் தொகுதியான நந்திகிராமில் 10,599 வாக்குகள் மட்டுமே நீக்கப்பட்டன. ஆனால் முதல்வர் மம்தா பானர்ஜி பிரதிநிதித்துவப்படுத்தும் பவானிபூர் தொகுதியில், 44,787 வாக்குகள், அதாவது, நந்திகிராமை விட 4 மடங்கு அதிக வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வசம் உள்ள சௌரிங்கியில் 74,553 வாக்குகளும், கொல்கத்தா துறைமுக தொகுதியில் 63,730 வாக்குகளும் அதிகபட்சமாக நீக்கப்பட்டன.
மாவட்ட வாரியாக, திரிணாமுல் காங்கிரஸ் கோட்டையாகக் கருதப்படும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அதிகபட்சமாக 8,16,047 வாக்குகளுடன் நீக்கப்பட்டன.
இறப்புகள், வாக்காளர்கள் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்தல் மற்றும் போலி வாக்குகள் இருப்பது போன்ற காரணங்களால் இந்த நீக்கங்கள் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இந்த மாதம் 16 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், முழு விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.