கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மாநகராட்சி-நகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
- அனைத்து மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
- முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன.
கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி, கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன.
முதல் கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களிலும், இரண்டாம் கட்டமாக திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.
முதல் கட்டத்தில் 71 சதவீதம், இரண்டாம் கட்டத்தில் 76 சதவீதம் என மொத்தத்தில் 73.69 சதவீதம் வாக்குகள் பதிவாகின. கடந்த தேர்தலை விட 2 சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகியிருந்தது. உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
வாக்கு எண்ணக்கை மையம் முன்பு அரசியல் கட்சியினர் திரண்டிருந்ததை படத்தில் காணலாம்.
வாக்கு எண்ணிக்கை மொத்தம் 244 மையங்களில் நடைபெற்றது. அனைத்து மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன.
காலை 8.30 மணியளவில் முன்னணி நிலவரம் வெளியாக தொடங்கியது. காலை 9.45 மணி நிலவரப்படி மாநிலத்தில் உள்ள 6 மாநகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி 3 இடங்களிலும், இடது ஜனநாயக முன்னணி 2 இடங்களிலும், ஐக்கிய ஜனநாயக கூட்டணி 2 இடங்களிலும், தேசய ஜனநாயக முன்னணி ஒரு இடத்திலும் முன்னிலை வகித்தன.
இதேபோல் மாநிலத்தில் உள்ள 86 நகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி 46 இடங்களிலும், இடது ஜனநாயக முன்னணி 30 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன.
941 கிராம பஞ்சாயத்துகளில் இடது ஜனநாயக முன்னணி 340 இடங்களிலும், ஐக்கிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 32 இடங்களிலும் முன்னிலை வகித்தன. மாநிலத்தில் உள்ள 14 மாவட்ட பஞ்சாயத்துகளில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி 7 இடங்களிலும், இடது ஜனநாயக முன்னணி 5 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன.
மாநகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் இடது ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக கூட்டணி மாறி மாறி முன்னிலையில் இருந்துவந்தன.