இந்தியா

சபரிமலையில் 26, 27-ந் தேதிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு ஒரே நாளில் முடிந்தது

Published On 2025-12-13 09:13 IST   |   Update On 2025-12-13 09:13:00 IST
  • நடப்பு சீசனில் மண்டல பூஜை வருகிற 27-ந் தேதியும், மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் 14-ந் தேதியும் நடக்கிறது.
  • தரிசன முன்பதிவு அடிப்படையில் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பூஜைகள், வழிபாடுகள் நடந்து வருகிறது. சீசனையொட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந் தேதி வரை தரிசன ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம் பக்தர்கள்) நிறைவடைந்தது. இதையடுத்து உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தினசரி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

நடப்பு சீசனில் மண்டல பூஜை வருகிற 27-ந் தேதியும், மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் 14-ந் தேதியும் நடக்கிறது. மண்டல பூஜையையொட்டி வருகிற 26, 27-ந் தேதிக்கான ஆன்லைன் முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்த 2 நாட்களுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று முன்தினம் மாலையில் தொடங்கியது. ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்படும் 26-ந் தேதி 30 ஆயிரம் பக்தர்களுக்கும், மண்டல பூஜை தினமான 27-ந் தேதி 35 ஆயிரம் பக்தர்களுக்கும் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டது. இந்தநிலையில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கிய ஒரே நாளில் முடிவடைந்தது. இதனால் ஐயப்ப பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த 2 நாட்களும் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையை 20 ஆயிரமாக உயர்த்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மண்டல பூஜை நெருங்கி வரும் நிலையில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால், உடனடி தரிசனத்திற்கான எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்றும் தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.

Tags:    

Similar News