இந்தியா

கர்நாடகாவில் லாரி ஸ்டிரைக்: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Published On 2025-04-15 10:37 IST   |   Update On 2025-04-15 10:37:00 IST
  • கர்நாடகாவில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் லாரிகள் இயங்கவில்லை.
  • மாநிலங்களிடையேயான சரக்கு லாரிகள் போக்குவரத்து சேவை முடக்கம்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதற்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதனை வாபஸ் பெறாவிட்டால் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் மாநில அரசு அதனை கண்டு கொள்ளவில்லை.

இதையடுத்து டீசல் விலையை திரும்ப பெற வேண்டும், எல்லையில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடகாவில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் லாரிகள் இயங்கவில்லை.

இந்த போராட்டத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான லாரிகள் பங்கேற்றுள்ளதால் மாநிலங்களிடையேயான சரக்கு லாரிகள் போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கி உள்ளது.

குறிப்பாக கர்நாடக மாநிலம் வழியாக மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு தினசரி தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் லாரிகள் செல்கின்றன.

இதே போல வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் கர்நாடகா வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வருகின்றன.

கர்நாடகாவில் லாரி ஸ்டிரைக் தொடங்கி உள்ளதால் அந்த மாநிலம் வழியாக லாரிகள் இயக்கினால் கற்கள் வீசப்படலாம், மேலும் டிரைவர்களை தாக்கி லாரிகளை சேதப்படுத்தலாம் என்ற நிலை உள்ளதால் அந்த வழியாக லாரிகளை இயக்க வேண்டாம் என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதனால் கர்நாடகா வழியாக தமிழகத்தில் இருந்து வட மாநிலம் செல்லும் லாரிகள் இயக்கப்பட வில்லை. இதே போல வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் லாரிகளும் இயக்கப்பட வில்லை. இதனால் தமிழகத்தில் இருந்து செல்லும் லாரிகள் கிருஷ்ணகிரி மவாவட்ட எல்லை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் லாரிகள் ஆந்திரா மாநிலம் வழியாக சுற்றி சென்று வருகின்றன. இதனால் கூடுதலாக 200 கி.மீ. தூரம் வரை சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து வடமாநிலத்திற்கு செல்லும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் இங்கிருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் தேங்காய், ஜவுளி, ஜவ்வரிசி, தீப்பெட்டி, மஞ்சள், முட்டை, கறிக்கோழி, இரும்பு தளவாடங்கள், காய்கறிகள் உள்பட பல்வேறு பொருட்கள் கொண்டு செல்ல முடியாமல் தேக்கம் அடைந்துள்ளன .

பால், மருந்து பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படும் லாரிகள் மட்டும் இயக்க அனுமதிக்கபபடுகிறது. இதே போல வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் பூண்டு, எண்ணை வகைகள், வெங்காயம், பருப்பு, மக்காச்சோளம் மற்றும் காய்கறிகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுவது முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கு இடையே 700 சரக்கு லாரிகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 50 சதவீத லாரிகளில் தக்காளி, பீட்ரூட், கோஸ், கேரட் ஆகியவை சென்னை உள்பட பல்வேறு மார்க்கெட்களுக்கு கொண்டு வரப்படுகிறது.

லாரிகள் வேலை நிறுத்தத்தால் காய்கறிகள் வரத்து பாதிப்பு ஏற்படும். இதனால் இந்த பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் அதற்கான விலை உடனடியாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே லாரி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு டீசல் விலையை உயர்த்திய போது லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. மாநில அரசின் சிறிய விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்னர்.

புதுச்சேரியை தவிர கர்நாடகாவில் தான் டீசல் விலை தென்னகத்திலேயே மலிவானது. பொது நலனுக்காக வேலை நிறுத்தத்தை அவர்கள் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News