லடாக் வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு: நிலைமை கட்டுக்குள் உள்ளதாக உள்துறை அமைச்சகம் விளக்கம்
- லடாக்கில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
- லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் அடுத்த மாதம் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, லடாக்கில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்று காலை முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர்.
மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
இதனிடையே, போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து போராட்டத்தைக் கட்டுப்படுத்த லேவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், லடாக்கில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை 4 மணியில் இருந்து அங்கு எந்த வன்முறை சம்பவமும் நிகழவில்லை என்றும் வன்முறையைத் தூண்டும் விதமான பழைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் எனவும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.