இந்தியா

கர்நாடக அதிகார மோதல்: சித்தராமையா - டி.கே. சிவகுமாருடம் ஆலோசனை - விரைவில் முடிவு என கார்கே உறுதி

Published On 2025-11-27 19:25 IST   |   Update On 2025-11-27 19:25:00 IST
  • தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார்.
  • விவாதிக்காமல் ஒருதலைப்பட்சமாக எந்த முடிவும் எடுக்கப்படாது

கர்நாடக காங்கிரசில் நடந்து வரும் அதிகாரப் போராட்டம் குறித்து கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மௌனம் கலைத்துள்ளார்.

கடந்த 2023 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி ஏற்றனர்.

தேர்தல் வெற்றியில் டி.கே. சிவகுமாருக்கு அதிக பங்கு இருப்பதால் 5 ஆண்டுகால ஆட்சியில் முதல் இரண்டை ஆண்டு காலம் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டு காலம் சிவகுமாரும் முதல்வராக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும் தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார். இதை டி.கே. சிவகுமார் பொதுவெளியில் ஆமோதித்தபோதும் டிகே சிவகுமார் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். அண்மையில் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாமிட்டனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, இந்த விவகாரம் தொடர்பாக மூத்த தலைவர்களுடன் விரைவில் ஒரு கூட்டம் நடத்தப்படும். அனைவருடனும் விவாதிக்காமல் ஒருதலைப்பட்சமாக எந்த முடிவும் எடுக்கப்படாது என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். அனைவரையும் கலந்துரையாடலுக்கு அழைக்கிறேன். அனைவரிடமும் பேசிய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் கட்சியில் உயர்மட்டக் குழுவின் பங்கு குறித்துப் பேசிய கார்கே, உயர்மட்டக் குழு என்பது ஒரு தனிநபர் அல்ல, அது ஒரு குழு. உயர்மட்டக் குழு ஒன்றாக அமர்ந்து இறுதி முடிவை எடுக்கும் என்று கூறினார்.  முன்னதாக ராகுல் காந்தி, சோனியா காந்தியிடம் விவாதித்து இந்த விவாகரத்துக்கு தீர்வு காணப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.  

Tags:    

Similar News