கர்நாடகாவில் அதிகார மோதல்: சித்தராமையா-சிவக்குமார் சந்திப்பு
- இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் வருகிற 1-ந்தேதிக்கு முன்பு முடிவு செய்யும் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
- இந்த சந்திப்பின் போது முதல்-மந்திரியின் சட்ட ஆலோசகர் ஏ.எஸ்.பொன்னையா உடன் இருந்தார்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் செயல்பட்டு வருகிறார்கள்.
2½ ஆண்டுகள் முடிவடைந்த பிறகும் ஒப்பந்தப்படி முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக சித்தராமையா மறுத்துள்ளார். இதனால் சிவக்குமார் அதிருப்தி அடைந்தார். அவரது ஆதரவாளர்கள் டெல்லியை முற்றுகையிட்டு சிவக்குமாரை முதல்-மந்திரியாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இந்த அதிகார மோதல் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் வருகிற 1-ந்தேதிக்கு முன்பு முடிவு செய்யும் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
இதற்கிடையே சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் நேரில் சந்தித்து பேசுமாறு காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து டி.கே. சிவக்குமாருக்கு காலை உணவுக்கு சித்தராமையா அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இன்று காலை 10 மணியளவில் முதல்-மந்திரி சித்தராமையா வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது முதல்-மந்திரியின் சட்ட ஆலோசகர் ஏ.எஸ்.பொன்னையா உடன் இருந்தார்.
பின்னர் சித்தராமையாவும், சிவக்குமாரும் ஒன்றாக காலை உணவு சாப்பிட்டனர். இட்லி, வடை, சாம்பார், சட்னி மற்றும் உப்புமா ஆகியவை காலை உணவாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு இருவரும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த சந்திப்பின் மூலம் கர்நாடக முதல்-மந்திரி விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்-மந்திரி பதவியில் இருந்து சித்தராமையா விலகி சிவக்குமார் முதல்-மந்திரி ஆவாரா? அல்லது முதல்-மந்திரி பதவியில் சித்தராமையா நீடிப்பாரா? என்பது விரைவில் தெரிய வரும்.