இந்தியா

(கோப்பு படம்)

ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம்- தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக கர்நாடக முதல்வர் பேட்டி

Published On 2022-11-20 13:24 GMT   |   Update On 2022-11-20 15:35 GMT
  • இந்த வழக்கை, தேசிய புலனாய்வு அமைப்பு, மாநில காவல்துறையுடன் இணைந்து விசாரிக்கிறது.
  • இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ள நெட்வொர்க், முறியடிக்கப்படும்.

பல்லாரி:

கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று ஆட்டோவில் இருந்து மர்ம பொருள் வெடித்து சிதறிய சம்பவத்தில் காயமடைந்த பயணி மற்றும் ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில வெடிகுண்டை வெடிக்க செய்ய டெட்டனேட்டர், கம்பிகள் மற்றும் பேட்டரிகள் பொருத்தப்பட்ட குக்கர் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் காயமடைந்த பயணி போலி ஆதார் அட்டை, போலியான முகவரி, போலியான பெயர் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்தி கோவையில் இருந்து சிம் கார்டு வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக உதகை அருகே உள்ள குந்தசப்பை கிராமத்தைச் சேர்ந்த நபரிடம் கர்நாடகா போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்நிலையில் மங்களூரு சம்பவத்தில் பயங்கரவாதத் தொடர்பு இருப்பதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். பல்லாரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியுள்ளதாவது:

முதற்கட்ட தகவல்களின்படி, வெடித்த பொருள் எல்இடி இணைக்கப்பட்ட கருவி என தெரிய வந்துள்ளது. சம்ப இடத்தில் கண்டு பிடிக்கப்பட்ட ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரும், அதை எடுத்துச் சென்ற நபரின் பெயரும் வெவ்வேறானது என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.

சந்தேகப்படும் நபரிடம் டூப்ளிகேட் ஆதார் அட்டை இருந்தது. அதில் ஹூப்ளி முகவரி இருந்தது. இது ஒரு பயங்கரவாதச் செயல், கோயம்புத்தூர் மற்றும் வேறு இடங்களுக்கும் அவர் பயணம் செய்துள்ளது, பயங்கரவாதத் தொடர்பைத் தெளிவாகக் காட்டுகின்றன. தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மற்றும் புலனாய்வுப் பணியகம் (ஐபி) அதிகாரிகளும், மாநில காவல்துறையுடன் இணைந்து இந்த வழக்கை விசாரிக்கிறது..

தேசிய புலனாய்வு அமைப்பின் 4 பேர் கொண்ட குழு, சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையுடன் ஒருங்கிணைத்து செயல்படுகிறது. சந்தேகப்படும் நபர் மருத்துவமனையில் உள்ளார். அவர் சுயநினைவு திரும்பிய பிறகு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணையில் மேலும் விவரங்கள் தெரியவரும்.

இந்த சம்பவத்தில் பரந்த நெட்வொர்க் உள்ளது, அது முறியடிக்கப்படும். தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணையில் உண்மை தெரிய வரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மங்களூரு சம்பவத்தை தொடர்ந்து கோயம்புத்தூர் புறநகர்ப் பகுதிகள் மற்றும் கர்நாடகாவில் முதல் கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லையான ஆனைகட்டி வரை வாகனச் சோதனையை போலீஸார் தீவிரப் படுத்தியுள்ளனர்.

ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் அதிக மக்கள் கூடும் இடங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுபவர்களின் உடமைகள் சோதனை செய்யப்படுகின்றன. மங்களூருவில் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News