ஜெயலலிதாவின் நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது
- ஜெயலலிதாவின் பொருட்களுக்கு உரிமை கோரி ஜெ.தீபா தாக்கல் செய்த மனு அந்த கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
- ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் பிப்ரவரி 14, 15-ந் தேதிகளில் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது.
பெங்களூரு:
தமிழகத்தில் ஜெயலலிதா 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை முதல்-அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இதில் அவர் ரூ.66.65 கோடி மதிப்புள்ள சொத்துகளை சட்டவிரோதமாக வாங்கி குவித்ததாக ஜெயலலிதா மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை பெங்களூருவில் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற மூவருக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனையை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இதில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் வழங்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. இதில் பெங்களூரு சிறப்பு கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த தீர்ப்பு வந்த நேரத்தில் ஜெயலலிதா ஏற்கனவே மரணம் அடைந்ததை அடுத்து அவரது பெயர் தீர்ப்பில் இருந்து கைவிடப்பட்டது. சசிகலா உள்பட 3 பேரும் சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு கர்நாடக அரசிடம் உள்ள சுமார் 27 கிலோ தங்க-வைர நகைகளை ஏலம் விட உத்தரவிடுமாறு பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே ஜெயலலிதாவின் பொருட்களுக்கு உரிமை கோரி ஜெ.தீபா தாக்கல் செய்த மனு அந்த கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து தமிழக அரசிடம் ஜெயலலிதாவின் நகைகளை கடந்த ஆண்டு மார்ச் 6, 7-ந் தேதிகளில் ஒப்படைக்கும்படி கர்நாடக அரசுக்கு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவில் அடிப்படையில் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் வழங்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஜெ.தீபாவின் மனுவை ஐகோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பளித்தது.
இதையடுத்து பெங்களூரு சிறப்பு கோர்ட்டு, ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் பிப்ரவரி 14, 15-ந் தேதிகளில் ஒப்படைக்கும்படி கடந்த மாதம் (ஜனவரி) உத்தரவிட்டது.
இந்நிலையில் பெங்களூரு சிட்டி சிவில் கோா்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி மோகன் முன்னிலையில் ஜெயலலிதாவின் நகைகள் சரிபார்க்கப்பட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது.