அமெரிக்காவுக்கான தபால் சேவை அதிரடி நிறுத்தம் - இந்தியா எடுத்த திடீர் முடிவு - ஏன்?
- தபால் துறை மூலம் பார்சல்கள் மற்றும் பிற பொருட்களை அனுப்புபவர்களை இந்த முடிவு பெரிதளவில் பாதிக்கும்.
- ஏற்கனவே பொருட்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் தபால் கட்டணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம்.
அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் தபால் சேவைகளை நிறுத்துவதாக இந்திய தபால் துறை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட புதிய சுங்க விதிமுறைகள் காரணமாக ஆகஸ்ட் 25 முதல் தபால் சேவைகள் நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. தபால் துறை மூலம் பார்சல்கள் மற்றும் பிற பொருட்களை அனுப்புபவர்களை இந்த முடிவு பெரிதளவில் பாதிக்கும்.
ஜூலை 30 அன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவின்படி, 800 டாலர் வரையிலான பொருட்களுக்கான சுங்க வரி விலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 29 முதல் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் ஒவ்வொரு பொருளுக்கும், அதன் மதிப்பு எதுவாக இருந்தாலும், சுங்க வரி விதிக்கப்படும்.
இருப்பினும், இந்த விதிமுறைகளில் இருந்து சில விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. 100 டாலருக்கும் குறைவான மதிப்புள்ள கடிதங்கள், ஆவணங்கள் மற்றும் பரிசுகளை அனுப்புவதில் எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது.
எனவே கடிதங்கள், ஆவணங்கள் மற்றும் 100 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் தவிர ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் பிற அனைத்து வகையான அஞ்சல் சேவை சார்ந்த முன்பதிவுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க இந்திய அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது
ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவிலிருந்து அஞ்சல் பொருட்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதன் காரணமாக, கட்டாய சூழ்நிலைகளில் அஞ்சல் துறை இந்த முடிவை எடுத்துள்ளது.
ஏற்கனவே பொருட்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் தபால் கட்டணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.